காங்கிரஸ் மாடல் தேசத்தையே அழித்துவிட்டது: பிரதமர் மோடி

காங்கிரஸ் மாடல் என்றால் ஊழல், குடும்ப அரசியல், மதவெறி மற்றும் சாதிவெறி என்றும், இந்த மாடல் ஒட்டுமொத்த தேசத்தையும் அழித்துவிட்டதாகவும் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

குஜராத்தில் வரும் டிசம்பர் 1, 5ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பா.ஜ., காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் வடக்கு குஜராத்தில் உள்ள மெஹ்சானா நகரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அவர் பேசியதாவது:-

கடந்த 20 ஆண்டுகளில் குஜராத்தில் மிகப்பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாநிலம் எதிர்கொண்ட பஞ்சம் பற்றி இன்றைய தலைமுறையினருக்கு தெரியாது. இதற்காக, முந்தைய தலைமுறையினர் கடுமையாக உழைத்துள்ளனர். காங்கிரஸ் மாடல் என்றால் ஊழல், குடும்ப அரசியல், மதவெறி மற்றும் சாதிவெறி. ஓட்டுவங்கி அரசியலில் ஈடுபடுவதற்கும், அதிகாரத்தில் இருக்க மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவதற்கும் அவர்கள் பெயர் பெற்றவர்கள். இந்த காங்கிரஸ் மாடல் குஜராத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தையும் அழித்துவிட்டது. அதனால்தான் இன்று நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல நாம் கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.