இலங்கையின் தேசிய சொத்துக்கள் மீது குறிவைத்து இருக்கும் அன்னிய சக்திகளே நாட்டில் ஏற்பட்ட நெருக்கடிக்கு காரணம் என்று இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசினார்.
இலங்கையில் கடந்த மார்ச் மாதம் மக்கள் புரட்சி வெடித்தது. அந்நிய செலாவணி பற்றாக்குறையால் அத்தியாவசிய பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாத நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. இதனால், இலங்கையில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களுக்கும் மக்களின் அத்தியாவசிய உணவுப்பண்டங்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட கரணங்களே இலங்கை நிதி நிலைமை மோசம் அடைந்தது என்று ராஜபக்சே சகோதரர்கள் கூறினாலும் இதை ஏற்க மக்கள் மறுத்துவிட்டனர். ராஜபக்சே சகோதரர்களின் மோசமான ஆட்சி நிர்வாகம், தவறான கொள்கைகள், ஊழல் போன்றவையே இலங்கையின் நிதி நிலையை அதலபாதாளத்திற்கு எடுத்துச்சென்றதாக கருதிய இலங்கை மக்கள் ராஜபக்சே சகோதரர்களுக்கு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை வரலாற்றில் வெடித்த மிகப்பெரும் மக்கள் கிளர்ச்சிகளில் ஒன்றாக இந்த போராட்டம் கருதப்பட்டது. மக்களின் போராட்டத்திற்கு அஞ்சி பிரதமர் பதவியில் இருந்து முதலில் மகிந்த ராஜபக்சேவும் அடுத்த சில வாரங்களில் அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலகினர். இதையடுத்து, நாட்டை விட்டு கோத்தபய ராஜபக்சே வெளியேறினார். மாலத்தீவு வழியாக சிங்கப்பூர் சென்ற கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து தாய்லாந்து சென்றார். தாய்லாந்தில் ஓட்டல் அறையை விட்டு வெளியேற முடியாத சூழலில் இருந்த கோத்தபய ராஜபக்சே இருமாதங்கள் கழித்து இலங்கையின் நிலமை சற்று சீரானது அதாவது கடந்த செப்டம்பர் மாதம் நாடுதிரும்பினார். இதற்கு மத்தியில், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் ரனில் விக்ரமசிங்கே இலங்கை அதிபராக கடந்த ஜூலை மாதம் பொறுப்பேற்றுக்கொண்டார். ஆட்சி அதிகாரத்தில் இருந்து ராஜபக்சே சகோதரர்கள் விலகினாலும் அவர்களது கட்சிக்கே தற்போதும் இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது.
இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே பட்ஜெட் தாக்கல் செய்து பேசினார். பின்னர், இலங்கையில் பாராளுமன்றத்தில் பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே, நாடாளுமன்றத்தில் பேசிய இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, இலங்கை பொருளாதார வீழ்ச்சிக்கு வெளிநாட்டு சக்திகளும் முந்தைய அரசும் காரணம் என்று விமர்சித்தார். தனது ஆட்சி நிர்வாகத்தில் சில தவறான முடிவுகள் எடுக்கப்பட்டதாக ஒப்புக்கொண்ட மகிந்த ராஜபக்சே, இலங்கையின் தேசிய சொத்துக்கள் மீது சில வெளிநாட்டு சக்திகள், கண் வைத்திருப்பதாகவும் அவர்களின் உள்ளூர் ஏஜெண்டுகள் அரசுக்கு எதிரான போராட்டத்தை தூண்டிவிட்டதாகவும் விமர்சித்தார். மேலும் தற்போது வெளிநாட்டு சக்திகளுக்கு ஆதரவான லோக்கல் ஏஜெண்டுகள் செயல்பட்டு வருவதாகவும் சாடினார். மேலும், “இலங்கையில் போராட்டத்தை வெளிநாட்டு சக்திகள்தான் தூண்டின. அவர்களின் நடவடிக்கைகளால் இலங்கையின் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டது. தற்போதுதான் சுற்றுலாத்துறை மீளத்தொடங்கியிருக்கிறது” என்றும் பேசினார்.