பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்பு நடவடிக்கைக்கு தயார்: ராணுவ தளபதி

மத்திய பாஜக அரசு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் என தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் வடபகுதி கட்டளை தளபதி உபேந்திரா திரிவேதியும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்பு நடவடிக்கைக்கு தயார் என தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு விடுதலை அடைந்த போது இந்தியா- பாகிஸ்தான் யுத்தம் நடைபெற்றது. முதலாவது இந்தியா- பாகிஸ்தான் யுத்தத்தின் போது காஷ்மீரின் பல பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமித்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் மத்திய பாஜக அரசு திட்டவட்டமாக உள்ளது. இந்தப் பகுதிகளை பாகிஸ்தானிடம் மீட்டெடுப்போம் எனவும் மத்திய அரசு சூளுரைத்துள்ளது. மத்திய அரசு வெளியிடும் வரைபடங்களில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் அனைத்தும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான உடன்பாடு மகராஜா ஹரிசிங், இந்தியக் குடியரசு இடையே கையெழுத்தான அடுத்த நாள் ஜம்மு காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் படைகளை வெளியேற்ற 1947 அக்டோபர் 27 அன்று, பட்காம் விமான நிலையத்தில் இந்திய விமானப்படை மூலம் இந்திய ராணுவம் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து அக்டோபர் 27 காலாட்படை தினமாக கொண்டாடப்பட்டது.
இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்று பேசுகையில், நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாக்க தங்களின் இன்னுயிரை ஈந்த ராணுவ வீரர்களுக்கும், ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும் வீரவணக்கம். இவர்களின் வீரம் மற்றும் தியாகம் காரணமாகவே, ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக தற்போது நீடிக்கிறது. எதிர்காலத்திலும் இது தொடரும். நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்து 370-வது பிரிவு நீக்கப்பட்டதற்கு முன் பல தசாப்தங்களாக ஜம்மு காஷ்மீர் மக்கள் வளர்ச்சியும், அமைதியும், இல்லாதவர்களாக இருந்தனர். 370-வது பிரிவு நீக்கப்பட்ட பின் இந்த யூனியன் பிரதேசத்தில் அமைதி மற்றும் வளர்ச்சியின் புதிய சகாப்தம் தொடங்கியது. பாகிஸ்தானால் காஷ்மீர் பகுதிகள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அங்கு மனித உரிமை மீறல்கள் நிகழ்கின்றன. இதற்காக விலையை பாகிஸ்தான் கொடுக்கத்தான் போகிறது என எச்சரித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்று வடபகுதி கட்டளை தளபதி உபேந்திரா திரிவேதி செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அதில் திரிவேதி கூறுகையில், ஜம்மு காஷ்மீரில் இப்போது 300 தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளனர். இன்னமும் 160 பேர் ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவ எல்லையில் காத்திருக்கின்றனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க மத்திய அரசு உத்தரவிட்டால் அதனை ராணுவம் நிறைவேற்றும் என்றார்.