புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர்களின் அதிகாரத்தை வரையறைக்கும் தேர்தல் ஆணைய சட்டம் 1991-ன் படி, அவர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது அடையும் வரை பதவியில் நீடிக்கலாம் என வரையறை செய்யப்பட்டுள்ளது. ஆனால், சமீப காலங்களில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்படுபவர்கள் குறுகியகாலமே பதவியில் இருக்கும்படி உள்ளது. இதனால், இதில் சீர்திருத்தம் செய்யக்கோரி பொதுநல அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் சரமாறி கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்நிலையில், புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக கடந்த 19ஆம் தேதி அருண் கோயல் நியமிக்கப்பட்டார். இதனிடையே எதன் அடிப்படையில் அருண் கோயல் நியமிக்கப்பட்டார், எந்தெந்த நடைமுறைகள் அதில் பின்பற்றப்பட்டன என்பது குறித்து அறிந்துகொள்வதற்காக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாள் முழுவதும் இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.