உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு!

உயர்ஜாதி ஏழைகளுக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில் அதனை மறுஆய்வு செய்யக்கோரி காங்கிரஸ் தலைவர் சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஜாதிவாரி இடஒதுக்கீட்டை போல் பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் அல்லது உயர்ஜாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் 103வது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. மேலும் 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரவீந்திர பட், திரிவேதி, பரித்வாலா அமர்வில் விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த 7 ம் தேதி 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் தீர்ப்பு இதில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, திரிவேதி மற்றும் பரித்வாலா ஆகியார் மத்திய அரசின் 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு வழங்கினர்.

இந்த வழக்கில் நீதிபதி ரவீந்திர பட் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கினார். அவர் தனது தீர்ப்பில், ‛‛பொருளாதார அடிப்படையில் பொதுபிரிவில் நலிந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கியது சட்டவிரோதம் கிடையாது. ஆனால் பொருளாதார ரீதியான இடஒதுக்கீட்டில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரை சேர்க்காதது சட்டவிரோதம். அனைத்து பிரிவினரும் சமுதாயத்தில் முன்னேற வேண்டும். இதனால் பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு பாரபட்சமாக இருக்கிறது” எனக்கூறி 103-வது அரசியலமைப்பு திருத்தம் செல்லாது” என கூறினார். இதனை அப்போதைய தலைமை நீதிபதி யுயு லலித் ஆமோதித்தார். இருப்பினும் 3 நீதிபதிகள் மத்திய அரசின் 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்பதால் இது நடைமுறையில் உள்ளது.

இதற்கிடையே தான் 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர் ஜெயா தாகூர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‛‛உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 சதவீத ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளனர். இதனால் திருத்தத்தை ஏற்க முடியாது என முன்னாள் தலைமை நீதிபதி யுயு லலித் மற்றும் நீதிபதி ரவீந்திர பட் ஆகியோரின் கருத்து ஏற்றுக்கொள்ளப்படுகிறது. 3:2 நீதிபதிகள் தீர்ப்பால் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மாற்றியமைக்கும் 103வது அரசியலமைப்பு திருத்தம் என்பது தற்போது நடைமுறையில் உள்ளது. இது இந்திரா சாவ்னி மற்றும் Ors.V.Union Of India பிற்படுத்தப்பட்டோர் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானதாக உள்ளது. மத்திய பணிகளில் 47.46 சதவீதம் தான் பொருளாதார அளவுகோலை கொண்டு மட்டுமே வர்க்கத்தை தீர்மானிக்க முடியாது. மேலும் இந்த இடஒதுக்கீடு என்பது மற்ற சமுதாயத்தினரை பாதிக்கலாம். நீண்டகாலமாக ஜாதிவாரி இடஒதுக்கீடு இருந்தாலும் கூட மத்திய அரசு பணிகளில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமுதாயத்தினரின் மொத்த எண்ணிக்கை என்பது 47.46 சதவீதமாக தான் உள்ளது. இதனால் தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.