மோடியின் உதடு ஒன்று பேசுகிறது; இதயம் ஒன்று செய்கிறது: முத்தரசன்

பிரதமர் மோடியின் உதடு ஒன்று பேசுகிறது; உள்ளம் ஒன்று செய்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அவர்களே ஆட்சி செய்ய வேண்டும் என பாஜக விரும்புகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேசினார்.

ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் மாநில மாநாடு நெல்லையில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதுதொடர்பான ஆயத்த கூட்டம் நெல்லை சிந்து பூந்துறை இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது:-

இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான ஏஐடியுசியின் மாநில மாநாடு டிசம்பர் ஒன்று தொடங்கி மூன்றாம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழகத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், கேரள வருவாய் துறை அமைச்சர் ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தொழிலாளர்களுக்கு எதிராக, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக தொழிலாளர் நலச் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்கள் தமிழகத்தில் அனுமதிக்க கூடாது, அமல்படுத்த கூடாது என மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

ஒரு மாத காலம் நடைபெறும் வாரணாசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தமிழ் குறித்து உரையாற்றி இருப்பது வரவேற்கத்தக்கது. உலகின் மூத்த மொழி தமிழ் என புகழும் பிரதமர், தமிழுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவைகளில் முக்கியத்துவம் அளிக்கவில்லை. பிரதமரின் உதடு ஒன்று பேசுகிறது; உள்ளம் ஒன்று செய்கிறது. மொழியை பற்றி உயர்வாக பேசிவிட்டு மொழி வளர்ச்சிக்கு பிரதமர் உதவவில்லை குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி செய்ய வேண்டும் என விரும்புகிறது. சட்டமன்ற உறுப்பினர்களை ஆடு, மாடுகளை போல் பாஜகவினர் விலை கொடுத்து வாங்குகிறார்கள். தமிழக ஆளுநரின் பேச்சுக்கள் அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்டு உள்ளது. ஆளுநரின் கருத்துக்கள் மத ரீதியிலாக அமைந்துள்ளது இதனை வைத்து அவரை நீக்கம் செய்திருக்க வேண்டும். மாநில மக்களின் நலன் சார்ந்த இருபதுக்கும் மேற்பட்ட மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.

மோடி அரசு, ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டிசம்பர் 29ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும். ஆளுநர் ரவி அரசியல் கட்சி தலைவரைப் போல் பகிரங்கமாக செயல்பட்டு வருகிறார். ஆறு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தனது பணியை சரியாக செய்யவில்லை என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஆளுநர் தனது மரியாதையை இழந்துள்ளார். ஆளுநர் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்திருக்க வேண்டும்.திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடரும்; கூட்டணி பலப்படும். அதே வேளையில் மக்கள் நலனுக்கான போராட்டங்களையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுக்கும். இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.