இலங்கை நாட்டில் போதைப் பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை நிறைவேற்றும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.
இந்தியா உட்பட உலக நாடுகள் முழுவதும் போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன. அதாவது, போதைப் பொருள் வைத்திருப்பவர்களுக்கு சிறைத் தண்டனை, அபராதம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அண்டை நாடான இலங்கையில், போதைப் பொருள் வைத்திருந்தால் மரணத் தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது. போதைப் பொருள் வைத்திருப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது. 5 கிராமிற்கு அதிகமான ஐஸ் ரக போதைப் பொருளை வைத்திருந்தாலோ அல்லது விற்பனையில் ஈடுபட்டாலோ மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கக் கூடிய வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இன்று முதல் இந்த புதிய சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக காவல்துறை போதைப் பொருள் ஒழிப்பு துறை தெரிவித்து உள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி, நச்சுப் பொருள், அபின், அபாயகர சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது குறித்த மசோதாவில் கையொப்பமிட்டு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் போதைப் பொருள் வைத்திருப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் அரசுக்கு எதிரான போராட்டம் அல்லது போராட்டங்கள் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிகளில் யார் ஈடுபட்டாலும் அதனை ராணுவ பலம் அல்லது அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்தி நசுக்குவோம் என்று அதிபா் ரணில் விக்ரமசிங்க எச்சரித்தார். இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று அவா் பேசியதாவது:-
இலங்கையின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் வரை நாடாளுமன்றத்தை கலைக்கப்போவதில்லை. பொருளாதாரத்தை சீராக்கிய பின்னர் தேர்தலுக்கு செல்ல முடியும். சட்டப்பூர்வமாக யார் வேண்டுமானாலும் போராட்டங்கள் அல்லது கூட்டங்களை நடத்தலாம். நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கத்தலாம், என்னை சர்வாதிகாரி என்று சொல்லலாம். எனக்கு ஆட்சேபனை இல்லை. இருப்பினும், நீங்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவதற்கு முன்பு காவல்துறையின் அனுமதி பெறப்பட வேண்டும். காவல் துறை அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபடலாம் என யாராவது நினைத்தால் அவர்களை தடுத்து நிறுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் போராட்டங்கள் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிகளில் யாராவது ஈடுபட்டால் அனுமதிக்க மாட்டேன். அதனை ராணுவ பலம் அல்லது அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்தி நசுக்குவோம். வன்முறைக்கு இடமில்லை. எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்காக நாடாளுமன்றத்தை கலைக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.