ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த அக்டோபரில் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறார் என்கிற குற்றசாட்டு இருந்து வருகிறது. இதனிடையே ஆன்லைன் ரம்மி தடை செய்வது தொடர்பான அவசர சட்டமசோதா நவ 27ம் தேதியுடன் காலாவதியாகிறது. அவசர சட்டத்திற்கு 6 மாதங்களும், சட்ட மசோதாவுக்கு 6 வாரத்திற்குள்ளும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இந்நிலையில் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட மசோதா தொடர்பாக சில விளக்கங்கள் கேட்டு தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். ஆளுநர் தரப்பிலிருந்து எழுப்பிய கேள்விகளுக்கு இன்று அரசு தரப்பில் விளக்கமளிக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.