ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் தமிழக மருத்துவ கவுன்சில் தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர்களால் தங்களைத் தாங்களே, நிர்வாகம் செய்து கொள்ளும், அதிகாரம் பெற்ற சுயசார்பு அமைப்பாகும். அதில் ஆளும் கட்சியோ அல்லது வேறு எந்த அமைப்புக்களும் தலையிட அதிகாரம் இல்லை. ஆனால் ஆளும் கட்சியின் ஆதரவு பெற்ற அரசு டாக்டர்களே இதில் பெரும்பாலும் போட்டியிட்டு வெற்றி பெறுகின்றனர். தமிழக மருத்துவ கவுன்சிலுக்கு கடந்த அக்டோபர் 19-ந்தேதி தேர்தல் அறிவிப்பு வெளியானது. தேர்தல் தபால் வாக்கு சீட்டு மூலம் டிசம்பர் 19-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது. சுமார் 1.5 லட்சம் டாக்டர்கள் உறுப்பினர்களாக உள்ள, அனைத்து டாக்டர்களையும், கட்டுப்படுத்தக்கூடிய வலிமை பெற்ற அதிகாரம் உள்ள இந்த அமைப்புக்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர்கள் 7 பேர் அங்கத்தினராக பதவி ஏற்க உள்ளனர்.
தேர்தல் அறிவிப்புக்கு முன்பு வெளியிடப்பட வேண்டிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவில்லை. மிகுந்த வற்புறுத்தலுக்கு பின்பு கிடைத்த வாக்காளர் பட்டியலில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளன. அதிலும் சுமார் 117 இறந்த டாக்டர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. சரியான வாக்காளர் பட்டியல் இல்லாமல் தமிழக மருத்துவ கவுன்சில் தேர்தல் நடத்தப்படுவது முற்றிலும் ஜனநாயகத்துக்கு விரோதமானது. டாக்டர்கள் தங்களுக்கு வாக்குரிமையை, உறுதி செய்து கொள்ள ஏதுவாக வாக்காளர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. இப்படிப்பட்ட பல சந்தேகங்களை கொண்ட இந்த தேர்தல் முறையாக, சரியாக நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த தேர்தல் தபால் வாக்கு சீட்டு முறையில்தான் தற்போது நடத்தப்பட உள்ளது. தபால் மூலம் நடத்தப்படும் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆகையால் அது, ஆன்-லைன் முறையில் நடத்தப்பட வேண்டும் என்பது பெரும்பாலான டாக்டர்களின் கருத்தாக உள்ளது. மேலும் இந்த தேர்தலை நடத்தக்கூடிய பதிவாளர் நியமனமும் முறைப்படி நடைபெறவில்லை என்று தெரிய வருகிறது அவர் 63 வயதாகியும் இந்த பணியில் தொடர்கிறார். அதற்குரிய உத்தரவை முறையானபடி அரசிடம் பெற்றதாக எந்த தகவலும் இல்லை. ஆகவே இப்படிப்பட்ட ஒரு பதிவாளரை வைத்துக்கொண்டு தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை. தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டுமென்றால் ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் நடைபெற வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். இதுவே பெரும்பாலான டாக்டர்களின் விருப்பமும் ஆகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.