கேரளாவில் அதானி துறைமுகத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை தடியடி!

திருவனந்தபுரம் அருகே அதானி வர்த்தக துறைமுக அமைக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் கடும் வன்முறை வெடித்தது. தடியடி, கல்வீச்சால் போலீசார் உள்பட ஏராளமானோர் காயமடைந்தனர்.

திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞத்தில் அதானி குழுமம் சார்பில் வர்த்தக துறைமுகம் அமைக்கும் பணிகள் கடந்த சில வருடங்களுக்கு முன் தொடங்கியது. இந்த துறைமுகத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி கடந்த 4 மாதங்களுக்கு மேலாக விழிஞ்ஞம் பகுதி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக தங்களுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி அதானி குழுமம் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், துறைமுகப் பணிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கேரள அரசுக்கு உத்தரவிட்டது.

இதன்படி நேற்று பணிகளை தொடங்க லாரிகளில் பொருட்கள் கொண்டு வரப்பட்டன. அந்த லாரிகளை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். ஒரு லாரி கல்வீசி தாக்கப்பட்டது. அப்போது துறைமுகத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் அங்கு திரண்டனர். இரு பிரிவினருக்கு இடையே கடும் மோதல் வெடித்தது. ஒருவருக்கொருவர் சரமாரியாக கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இதில் போலீசார் உள்பட ஏராளமானோர் காயமடைந்தனர். தொடர்ந்து போலீசார் அனைவரையும் அங்கிருந்து விரட்டியடித்தனர். இதனால் பதற்றம் நிலவியது.