மத்திய அரசின் கல்வி உதவித் தொகை நிறுத்தம்: வைகோ கண்டனம்!

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான சிறுபான்மையினருக்கான மத்திய அரசின் கல்வி உதவித் தொகை நிறுத்தியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை மாணவர்களுக்கு மெட்ரிக்குக்கு முன்பான கல்விக்கு உதவித் தொகை (Pre Matric Scholorship) இது நாள் வரை 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இனி 1 முதல் 8 வது வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து இன்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சிறுபான்மை மாணவர்களுக்கான பள்ளிக் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ், ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இதுநாள் வரை மத்திய அரசின் உதவித் தொகையைப் பெற்று கல்வி கற்று வந்தார்கள். இந்தத் திட்டத்திலும் கைவைத்துவிட்டது மத்திய பாஜக அரசு. இந்த உதவித் தொகை, 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே இனி கிடைக்கும் என்ற புதிய அறிவிப்பை மத்திய அரசு இப்போது வெளியிட்டுள்ளது. இதனால் ஒன்றாம் வகுப்பு தொடங்கி, 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ – மாணவிகளுக்குக் கிடைத்து வந்த மத்திய அரசின் கல்வி உதவித் தொகை இனி கிடைக்காது. இதனால் சிறுபான்மை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பு அரசியல் நடத்தி வரும் மோடி அரசின் அநியாயமான தாக்குதல் நடவடிக்கையே இது. சிறுபான்மையினருக்கு எதிரான மத்திய அரசின் இந்த நடவடிக்கையை மதிமுக வன்மையாகக் கண்டிக்கிறது. 9ம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் மாணவர்கள் மீதும் இந்தத் தாக்குதல் நாளை தொடரலாம் என்ற அச்சம் இப்போது அனைவரிடமும் எழுந்துள்ளது.

கல்வி உதவித் தொகை வழங்குவதில் ஏற்கெனவே இருந்த நடைமுறையே தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். தமிழக முதல்வர் முக ஸ்டாலின், பிற மாநில முதல்வர்களும், மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து போர்க்குரல் எழுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.