இந்து கோயில்கள் மட்டும் ஏன் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

மசூதி, தேவாலயங்கள் அரசாங்க கட்டுப்பாட்டில் இல்லாத போது இந்து கோயில்கள் மட்டும் ஏன் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

சென்னை சேத்துப்பட்டில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவர் எஸ் வேதாந்தம் எழுதிய மனதோடு பேசுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராஜ்யசபாவின் முன்னாள் எம்பியும் பாஜக மூத்த நிர்வாகியுமான சுப்பிரமணியன் சுவாமி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். இந்த விழாவில் சுப்பிரமணியன் சுவாமி பேசுகையில் கூறியதாவது:-

இந்து ஒற்றுமை குறித்த பிரச்சினை நாட்டில் உள்ளது. அனைத்திற்கும் ஆர்ப்பாட்டம் செய்து நீதிமன்றம் சென்றுதான் வெற்றி பெற வேண்டிய சூழல் உள்ளது. 80 சதவீத இந்துக்கள் உள்ள நாட்டில் ராம் சேதுவை காப்பாற்ற நீதிமன்றங்கள் தேவைப்படுகின்றன. கோயிலை விடுதலை செய்யவும், கோயிலுக்குள் பிரவேசம் செய்யவும் நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மசூதி, தேவாலயங்கள் அரசாங்க கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில் 4 லட்சம் இந்து கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. கோயிலை விடுதலை செய்ய மிகப் பெரிய போராட்டங்களை நாட்டில் நடத்த வேண்டும். இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கில் வெற்றி பெற்றால் அனைத்து கோயில்களும் அரசாங்கத்தின் பிடியிலிருந்து வெளியே வரும். இந்து என்றால் வடநாடு, தென்நாடு என பார்க்க மாட்டார்கள். மூன்று கடல் எங்கு சங்கமிக்கிறதோ அதுதான் திராவிடம். கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழகம் ஆகிய அனைத்தும் சேர்ந்ததுதான் திராவிடம். அது ஒரு ஜாதியோ மதமோ கிடையாது. ஆனால் மக்களை முட்டாளாக்கி திராவிடம் என்றால் வித்தியாசமான ஒரு சமுதாயம் என கூறுகிறார்கள். எனவே இதை எதிர்கொள்ள இந்துக்கள் ஒன்றாக வேண்டும். நாட்டில் இந்து மறுமலர்ச்சி அடைய நிறைய பணிகள் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.