ஸ்டான்லி அரசு மருத்துவமனை லிப்டில் மாட்டிக்கொண்ட மா.சுப்ரமணியன்!

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் லிப்டில் மாட்டிக்கொண்ட மா.சுப்பிரமணியன், அதிகாரிகள் லிப்ட் ஆப்பரேட்டர் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்றிருந்தார். அறுவை சிகிச்சை துறை கட்டடத்தில் லிப்டில் அவர் சென்றுகொண்டிருந்த போது பழுதாகி இயக்கம் தடைபட்டது. அமைச்சருடன் மருத்துவர்களும் உடன் சென்றனர். அப்போது செய்வதறியாது பலரும் தவித்தனர். வேண்டும் என்று யாரும் செய்வதில்லை. இது எதிர்பாராமல் நிகழ்ந்தது என்று லிப்டிற்குள் மாட்டிக்கொண்டிருந்த அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார். இதனையடுத்து லிப்டின் ஆபத்து கால கதவின் வழியாக அவரை அங்கிருந்த ஊழியர்கள் வெளியே அழைத்து வந்தனர். அமைச்சருடன் இருந்த மருத்துவர்களும் வரிசையாக கீழே இறங்கினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இதய சிகிச்சை பிரிவு, சிறுநீரக சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். மாடியில் சிகிச்சை பெறுபவர்களை பார்க்க செல்லும் போது அடிக்கடி லிப்ட் பழுதாகிறது. அடிக்கடி லிப்ட் பழுதாகி விடுவதால் நோயாளிகளின் உறவினர்கள் பதற்றம் அடைகின்றனர். சில நிமிட போராட்டத்திற்குப் பிறகு லிப்ட் ஆபரேட்டரின் உதவியுடன் மீட்கப்படுகின்றனர். லிப்ட் அவ்வப்போது பழுதாகி வருகிறது. ஊழியர்கள் இதை உரிய முறையில் பராமரிக்காததால் இதுபோன்ற நிலை ஏற்படுவதாக புகார் கூறப்படுகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன் லிப்ட் பழுதானது குறித்து விளக்கம் அளித்தார். திருச்சி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனைகளில் பழுதான பழைய லிப்ட்கள் மாற்றப்படும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், பான்பராக், குட்கா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். தமிழ்நாட்டிலுள்ள எந்த கடைகளிலும் தடைச்செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கண்டறியப்பட்டால் நடவடிக்கைகள் எடுக்கப்படும். முதல் முறை நோட்டீஸ் இரண்டாவது முறை அபராதம் அடுத்ததாக சீல் வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குட்கா விற்பனையாளர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று கூறினார்.

வியாபாரிகளை மாவட்டம் தோறும் ஒன்றிணைத்து உறுதிமொழியை எடுக்க வைக்கவேண்டும். மாணவர்கள் மத்தியில் அதிகப் புழக்கம் இருப்பதால் கல்லூரி மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் ஆங்காங்கே மாவட்டத்திற்கு 50 இடங்களில் நிரந்தரமாக வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாணவர்கள் பயன்படுத்தும் நோட்டு புத்தகங்களில் புகையிலை தொடர்பான நிறுவனங்களின் பெயர் இருந்தால் அதை தவிர்த்து விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற வழிவகைச் செய்யப்படும். கட்டுப்படுத்தவே முடியாமல் இருக்கும் மாவட்டங்களில் அதிகாரிகள் மீது விசாரித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். இரண்டு மாதங்களில் புகையிலை குட்கா பொருட்களை கட்டுப்படுத்த முழு நடவடிக்கைகள் எடுக்கப்படும். இரயிலில் எடுத்து வந்ததாலும் தெரிய வரும் பட்சத்தில் புகார் அளிப்பவர்கள் விபரம் வெளியே தெரிவிக்கப்படாது. 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் அனுப்பலாம். புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மட்டுமல்லாமல் எங்கிருந்து வருகிறது என தெரியும் பட்சத்தில் யாராக இருந்தாலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.