உக்ரைன் போரில் அமெரிக்காவும் பிற நேட்டோ நாடுகளும் நேரடியாகப் பங்கேற்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து, காணொலி மூலம் நேற்று நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் ரஷ்யா வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் கூறியதாவது:-
உக்ரைன் போரில் அமெரிக்காவும் நேட்டோ அமைப்பின் பிற உறுப்பு நாடுகளும் பங்கேற்கவில்லை என்று யாரும் கூற முடியாது. உண்மையிலேயே அந்த நாடுகள் உக்ரைன் போரில் நேரடியாகப் பங்கேற்றுள்ளன. ரஷ்யாவுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்களை அனுப்பும் அந்த நாடுகளுக்கு, போரில் நேரடிப் பங்குள்ளது. அதுமட்டுமின்றி, உக்ரைன் வீரா்களுக்கு அந்த நாடுகளில் போா்ப் பயிற்சியளிக்கப்படுகிறது. தங்களது சொந்த மண்ணிலேயே பிரிட்டன், ஜொ்மனி, இத்தாலி மற்றும் பிற நாடுகள் எங்களுக்கு எதிராகப் போரிட உக்ரைன் வீரா்களுக்கு பயிற்சியளிக்கின்றன. இதன் மூலமும் இந்தப் போரில் நேட்டோ உறுப்பு நாடுகள் நேரடியாகப் பங்கேற்கின்றன.
உக்ரைனின் மின் நிலையங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவது, அந்த நாட்டின் போரிடும் திறனைக் குறைப்பதற்காகவும், மேற்கத்திய நாடுகளிலிருந்து உக்ரைனுக்கு ஆயுதங்கள் வருவதைத் தடுத்து நிறுத்துவதற்காகவும்தான். உக்ரைன் அரசின் மன உறுதியைக் குலைத்து, அந்த நாட்டை பேச்சுவாா்த்தைக்கு இழுத்து வர வேண்டும் என்பதற்காகத்தான் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதாகக் கூறுவது தவறாகும். நாங்கள் உக்ரைனை பேச்சுவாா்த்தைக்கு கட்டாயப்படுத்தில்லை. அதே நேரம், உக்ரைன் பேச்சுவாா்த்தைக்கு வந்தால் அதில் பங்கேற்கவும் தயராக இருக்கிறோம்.
அமெரிக்க அதிபா் ஜோ பைடனுக்கும் ரஷ்யா அதிபா் விளாதிமீா் புதினுக்கும் நேரடிப் பேச்சுவாா்த்தை நடைபெறுவதற்கான வாய்ப்பு வந்தால், அதனை நிராகரிக்க மாட்டோம். ஆனால் அதற்குரிய உண்மையான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. ரஷ்யா சிறைகளிலுள்ள அமெரிக்க கைதிகள் குறித்து ஏற்கெனவே அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கனுடன் பேசியிருக்கிறேன். அந்தப் பேச்சுவாா்த்தை நல்ல பலனை அளித்தது. இதுதொடா்பாக ஆலோசிக்க தனி தகவல் பரிமாற்ற இணைப்பை ஏற்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.