இலங்கையில் கடும் குளிருக்கு ஏராளமான கால்நடைகள் பலியானதைத் தொடா்ந்து, மாவட்டங்களிடையே இறைச்சி எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் வழக்கத்துக்கு மாறான குளிரினால் கால்நடைகள் இறப்பதால் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சியின் ஏற்றுமதிக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இது குறித்த அறிவிப்பினை இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலங்குகள் நலத் துறை சார்பில் கூறுகையில், வடக்கு மாகாணத்தில் 358 மாடுகளும், 191 ஆடுகளும் இறந்துள்ளன. கிழக்கு மாகாணத்தில் 444 மாடுகள், 34 எருமைகள் மற்றும் 65 ஆடுகள் உயிரிழந்தன. மோசமான வானிலை காரணத்தினால் கால்நடைகள் இறப்பதாகக் கூறினாலும், இறந்த கால்நடைகளின் மாதிரிகளை ஆய்வக சோதனைக்கு அனுப்பியுள்ளது இலங்கை கால்நடைத் துறை. ஆய்வின் முடிவுகள் வந்ததும் கால் நடைகள் அதிக அளவில் இறப்பதற்கான காரணம் என்ன என்பது தெரிய வரும்.
இது குறித்து அதிபா் ரணில் விக்ரமசிங்க பிறப்பித்த உத்தரவில், ‘கடந்த 2 நாள்களில் நாடு முழுவதும் 836 மாடுகள், 256 ஆடுகள் கடும் குளிருக்கு பலியாகியுள்ளன. எனவே, பொதுமக்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு, மாவட்டங்கள் இடையேயும் மாநிலங்கள் இடையேயும் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி எடுத்துச் செல்வதற்குத் தடை விதிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.