ஆஸ்திரேலியாவில் போலீசாரை குறிவைத்து தாக்குதல்: 2 போலீசார் பலி!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் நடந்த தாக்குதலில் இரண்டு போலீசார் பலியாகினர்.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம் விம்பிலா நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன் காணாமல் போன நபர் ஒரு பண்ணை வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பண்ணை வீட்டிற்கு நேற்று மாலை 5 மணியளவில் போலீசார் சென்றனர். அப்போது, அந்த வீட்டிற்குள் இருந்த 3 பேர் கொண்ட கும்பல் போலீசார் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த தாக்குதலால் அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக பதில் தாக்குதல் நடத்தியதுடன் கூடுதல் போலீசாரை அனுப்பும்படி தகவல் கொடுத்தனர். பண்ணை வீட்டில் இருந்த பெண் உள்பட 3 பேர் போலீசார் மீது தாக்குதல் நடத்தியதில் போலீஸ் அதிகாரிகள் ரஷெல் மெக்கிரவ்ன் மற்றும் மேத்திவ் அர்னால்டு ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சத்தம் கேட்டு அருகில் வசித்து வந்த நபர் அந்த பண்ணை வீட்டிற்கு ஓடி வந்துள்ளார். அப்போது, அந்த நபர் மீதும் அந்த கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து இருதரப்பு இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. 6 மணி நேரம் நடந்த இந்த மோதலில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய பெண் உள்பட 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால், இந்த மோதலில் 2 போலீசார், 1 பொதுமக்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும், சில போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. போலீசார் மீது தாக்குதல் நடத்தியது யார்? தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.