டுவிட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா என கேள்வி எழுப்பி எலான் மஸ்க் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கி தன் வசப்படுத்தியுள்ளார். டுவிட்டர் தன் வசமானதும் அதில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரப்போவதாகவும் எலான் மஸ்க் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அந்த வகையில், பல்வேறு மாற்றங்கள் டுவிட்டர் நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, டுவிட்டர் ஊழியர்கள் பாதிக்கும் மேல் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். அதிகாரப்பூர்வ கணக்கான ப்ளூ டிக்கை பயன்படுத்த மாதம் 8 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இது தவிர டுவிட்டரின் தொழில்நுட்பத்திலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
டுவிட்டரில் கருத்து சுதந்திரம் பற்றி அந்நிறுவனத்தை வாங்குவதற்கு முன்னரும், தற்போதும் பேசி வரும் எலான் மஸ்கின் நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், விமர்சனங்கள், குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் கட்டுப்பட்ட மாட்டேன் என்பது போன்ற வகையில் அவரது செயல்பாடுகள் உள்ளன.
இந்த நிலையில், உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 30 கோடிக்கும் மேலாக பயனர்களை கொண்டுள்ள சமூக வலைதளமான டுவிட்டரின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் எலான் மஸ்க், தான் பதவி விலக வேண்டுமா என கேள்வி எழுப்பி வாக்கெடுப்பு ஒன்றை டுவிடட்ரிலேயே நடத்தி வருகிறார். இந்த முடிவுகளுக்கு தான் கட்டுப்படுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில், “நான் டுவிட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா? இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கு நான் கட்டுப்படுவேன்” என்று பதிவிட்டுள்ளார். கடந்த 8 மணி நேரத்துக்கு முன்பாக இதனை அவர் பதிவிட்டுள்ளார். அவரது பதிவை லட்சக்கணக்கானோர் ரீட்வீட் செய்தும், லைக் செய்தும் வருகின்றனர். ஏராளமானோர் அந்த பதிவில் கமெண்ட் செய்தும் வருகின்றனர். இதுவரை 14,172,018 வாக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து பலரும் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.