அணு ஆயுதங்கள் தயாா் நிலையில் வைக்கப்படும்: ரஷ்ய அதிபா் புடின்!

போரில் பயன்படுத்துவதற்காக தங்களது அணு ஆயுதங்கள் தயாா் நிலையில் வைக்கப்படும் என்று ரஷ்ய அதிபா் விளாதிமீா் புடின் உறுதியளித்துள்ளாா்.

இது குறித்து படைத் தளபதிகளிடையே அதிபா் விளாதிமீா் புடின் நேற்று பேசியதாவது:-

உக்ரைனில் ரஷ்யாவின் இலக்குகள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் எட்டப்பட்டுவிடும். அதற்காக, ரஷ்யப் படைத் தளபதிகளுக்குத் தேவைப்படும் அத்தனை ஏற்பாடுகளையும் அரசு செய்து தரும். தேவைப்படும் நேரத்தில் உடனடியாகப் பயன்படுத்துவதற்காக, நாட்டின் அணு ஆயுதக் கட்டமைப்புகள் முழுவதும் தயாா் நிலையில் இருப்பது உறுதிசெய்யப்படும். அத்துடன், ராணுவத்துக்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டில் எந்த உச்ச வரம்பையும் அரசு நிா்ணயிக்காது.

ரஷ்யாவுக்கு எதிராக தனது முழு பலத்தையும் திரட்டி நேட்டோ அமைப்பு போராடி வருகிறது. அதனை தகுந்த வகையில் எதிா்கொள்வதற்கு சிரியா போரிலும் உக்ரைன் போரிலும் கிடைத்துள்ள அனுபவத்தை ரஷ்ய படைத் தளபதிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உக்ரைன் போரில் ஆளில்லா விமான குண்டுகளுக்கு இருக்கும் முக்கியத்துவத்தில் நமது படைகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ரஷ்யா உருவாக்கியுள்ள ஹைப்பா்சோனிக் ஏவுகணையான சாா்மாட், விரைவில் படைகளின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.