அமெரிக்காவில் குளிர்கால புயல் பாதிப்பில் சிக்கி 32 பேர் பலியானார்கள். ரெயில் மற்றும் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாகவே வீசி வரும் கடுமையான பனிப்புயலால் ஒட்டுமொத்த நாடும் உறைந்து போயுள்ளது. பருவநிலை மாற்றம் எதிரொலியாக ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் அதன் தாக்கம் பரவலாக காணப்படுகிறது. கடந்து போன கோடை காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் வெப்ப அலை பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றது. ஸ்பெயின், போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளில் காட்டுத்தீ, வெப்ப அலை பாதிப்புகளுக்கு மொத்தம் ஆயிரக்கணக்கானோர் வரை உயிரிழந்தனர் என அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றது. எனினும், இது அதிகரித்து இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கோடையில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில், குளிர்காலம் தொடங்கி நடந்து வரும் சூழலில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதன் தாக்கம் பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் திடீரென தோன்றிய வெடிகுண்டு சூறாவளியால் கடந்த வெள்ளி கிழமை 15 லட்சம் பேருக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின், அதனை சீர்செய்யும் பணி நடந்தது. சூறாவளி தாக்கம் நேற்று முன்தினமும் தொடர்ந்தது. இதனால், 7 லட்சம் பேர் வரை மின்சாரமின்றி இருளில் மூழ்கினர். மற்ற இடங்களில் நிலைமை ஓரளவுக்கு சீரமைந்து இருந்தது. கொரோனா பெருந்தொற்றால் முடங்கி போன மக்கள் 2 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று கிறிஸ்மஸ் பண்டிகை தினத்திற்கு தயாரான நிலையில், கொண்டாட்டங்களில் மீண்டும் ஈடுபட முடியாமல் திணறினர். குளிர்கால சூறாவளியால் நாடு முழுவதும் பனிபடர்ந்து சாலைகள் மூடப்பட்டு உள்ளன. வாகனங்களில் சென்றவர்கள் சிலர் உறைபனியால் காருக்குள்ளேயே சிக்கி கொண்டனர். அவர்களால் வெளியே வரமுடியவில்லை. இதுதவிர, விமான மற்றும் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.
டெக்சாஸ், சிகாகோ, நியூயார்க், ஓஹியோ பகுதிகளில் கடும் குளிரால் மக்கள் அவதியடைந்தனர். அமெரிக்காவின் நியூயார்க், சிகாகோ மற்றும் சியாட்டில் சர்வதேச விமான நிலையங்கள் உள்பட விமான சேவை பாதிக்கப்பட்டு 5 ஆயிரம் அமெரிக்க விமானங்கள் கடந்த வெள்ளி கிழமை ரத்து செய்யப்பட்டும், 7,600 விமானங்கள் காலதாமத்துடனும் இயக்கப்பட்டன. தொடர் குளிர் சூழலால், நேற்று முன்தினமும் இதே நிலை காணப்பட்டது. 2,700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 6,400 விமானங்கள் காலதாமத்துடன் இயக்கப்பட்டன. அமெரிக்காவில் பல பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 45 டிகிரி செல்சியஸ் அளவிற்கு கீழ் சென்றுள்ளது. குளிர்காற்றும் தொடர்ந்து வீசி வருகிறது. வானிலை தொடர்பான மாற்றங்களால் பல இடங்களில் நேற்று 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்கு உள்ளாகின. இந்த விபத்து சம்பவத்தில் நேற்று 16 பேர் வரை உயிரிழந்தனர்.
கென்டகி பகுதி கவர்னர் ஆண்டி பெஷீர், மக்கள் வீடுகளிலேயே பாதுகாப்புடன் இருக்கும்படி கேட்டு கொண்டதுடன் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார். நியூயார்க்கின் சில பகுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் கடந்த வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் வாகன இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. அமெரிக்காவில் கடுமையான சூறாவளி புயலில் சிக்கி இதுவரை மொத்தம் 32 பேர் உயிரிழந்து உள்ளனர். பலர் வாகனங்களுக்குள்ளே சிக்கி கொண்டனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது. மேற்கத்திய நியூயார்க் நகரில் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. கிறிஸ்துமஸ் வாரம் முழுவதும் கடுமையான குளிரும், பனிபடர்ந்தும் இருக்கும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டு, வீடுகள் மற்றும் தொழில்கள் முடங்கின. விமானங்கள், ரெயில்கள் என அனைத்து வித வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டன. இதனால், நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவுக்கு சாலைகள் மூடப்பட்டன.
குளிர்கால புயலை முன்னிட்டு சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடும் வகையிலான மின்அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டு இருந்தன. வாஷிங்டன் டி.சி.யில் 30 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு மிக குறைந்த வெப்பநிலை நேற்று பதிவானது. அமெரிக்காவில் மின்னிபோலிஸ் நகரம் நேற்று மைனஸ் 6 டிகிரி பாரன்ஹீட் என மிக அதிக குளிரான நகராக பதிவானது. கிறிஸ்மஸ் நாளான இன்று காலை பார்கோ, வடக்கு டகோட்டா நகரங்களில் வெப்பநிலை மைனஸ் 20 டிகிரியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வெடிகுண்டு சூறாவளி அல்லது சூறாவளி பாம் என்பது குளிர் மற்றும் வறண்ட காற்று ஒன்றுடன் ஒன்று மோதுவதால் ஏற்படுகிறது. சூடான காற்று மேலே எழும்பி, ஒரு மேக அமைப்பை உருவாக்குகிறது. இது காற்றழுத்தத்தைக் குறைக்கிறது. காற்றழுத்தம் 24 மணி நேரத்திற்குள் 20 மில்லிபார்கள் அல்லது அதற்கு மேல் குறையும். அப்போது புயல் ஏற்படும் நிலையில், இதில் குளிர் காற்று மோதும் போது, வெப்பநிலை பூஜ்ஜியத்திற்குக் கீழே ஆபத்தான நிலைக்குச் செல்கிறது. இந்த தலைமுறையிலேயே இல்லாத அளவுக்கு இது மிக மோசமான பனிப்புயல் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். வரும் நாட்களில் நிலைமை சற்றே சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.