ரஷ்யாவின் ஏங்கல்ஸ் விமான தளத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு உக்ரைன் முயற்சித்துள்ளது. உக்ரைன் டிரோன் விமான தளத்திற்குள் நுழைந்த நிலையில் ரஷ்ய ராணுவ வீரர்கள் அதனை சுட்டு வீழ்த்தி உள்ளனர். டிரோன் விழுந்து நொறுங்கியதில் விமானப்படை தளத்தின் ஊழியர்கள் 3 பேர் பலியானார்கள்.
இது குறித்து ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
எங்கல்ஸ் விமானதளத்தில் தாக்குதல் நடத்துவதற்காக உக்ரைனின் ஆளில்லா விமானமொன்று உள்ளூா் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1.35 மணிக்கு (இந்திய நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை 4.05 மணி) தாழ்வாகப் பறந்து வந்தது. அதனை ரஷ்ய வான்பாதுகாப்பு ஏவுகணை இடைமறித்து தாக்கி அழித்தது. இதனால் சிதறிய ஆளில்லா விமான பாகங்கள் விழுந்ததில், விமானதளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பாதுகாப்புப் படை தொழில்நுட்பப் பிரிவு வீரா்கள் 3 போ் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் வழக்கம் போல் நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை. எனினும், அந்த நாட்டு தொலைக்காட்சியில் பேசிய உக்ரைன் விமானப் படை செய்தித் தொடா்பாளா் யூரி இஹ்னட், ‘எங்கல்ஸ் விமானதளத்தில் நடத்தப்பட்டுள்ள தாக்குதல், ரஷ்ய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கான எதிா்வினையாகும்.
உக்ரைன் எல்லைக்கு அப்பால் மிக நீண்ட தொலைவில் இருக்கும் தங்கள் நாட்டுப் பகுதிகளுக்கு இந்தப் போரால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ரஷ்யா நினைத்தால், அது அவா்களது தவறான நம்பிக்கையாகும்’ என்றாா் அவா்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது. ஏற்கெனவே ரஷ்ய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் வசமிருந்த கிழக்கு உக்ரைன் பகுதிகளையும், கூடுதலாக சில பகுதிகளையும் ரஷ்யா கைப்பற்றி, 4 பிரதேசங்களை தங்களது நாட்டின் அங்கமாக அறிவித்துள்ளது. அந்தப் பிரதேசங்களில் இன்னும் அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை கைப்பற்ற ரஷ்யப் படையினா் முயன்றாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் சில பகுதிகளை உக்ரைன் படையினா் ரஷ்யாவிடமிருந்து மீட்டனா்.
இதற்கிடையே, உக்ரைனிடமிருந்து ரஷ்யா கடந்த 2014-ஆம் ஆண்டு கைப்பற்றிய கிரீமியா தீபகற்பத்துக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான கடல் பாலம், கிரீமியாவிலும், ரஷ்யாவிலும் உள்ள விமானதளங்கள் போன்றவற்றின்மீது உக்ரைன் அடிக்கடி தாக்குதல் வருகிறது. இந்த நடவடிக்கைகளுக்கு பதிலடியாக, உக்ரைன் முழுவதும் மின் உற்பத்தி நிலையங்கள், குடிநீா் ஏற்று மையங்கள் போன்ற அத்தியாவசியக் கட்டமைப்புகள் மீது ஏவுகணைகள், எறிகணைகள், ராக்கெட் குண்டுகள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக, மின்தடை, குடிநீா் தட்டுப்பாடு போன்றவற்றால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இந்தச் சூழலில், ரஷ்யாவின் முக்கியத்துவம் வாய்ந்த எங்கல்ஸ் விமானதளத்தில் இரண்டாவது முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தாக்குதலுக்குள்ளான எங்கல்ஸ் விமானதளம், உக்ரைன் எல்லைக்கு அப்பால் சுமாா் 483 கி.மீ. தொலைவில் உள்ளது. உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுக்கு இந்த விமானதளம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த தளத்தில்தான், உக்ரைனில் மிகக் கடுமையாக பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் ரஷ்யாவின் அதிநவீன குண்டுவீச்சு விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த மாதத் தொடக்கத்திலும் எங்கல்ஸ் விமானதளத்தில் இதே போன்றதொரு தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியது. இதுபோன்ற தாக்குதல்களுக்கு உக்ரைன் நேரடியாகப் பொறுப்பேற்பதில்லை. எனினும், அந்தத் தாக்குதல்கள் குறித்து உக்ரைன் அதிகாரிகள் வெளிப்படையாக மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனா். உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதலின் விளைவாகத்தான் அந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அவா்கள் கூறி வருகின்றனா்.