நொய்டாவை சேர்ந்த நிறுவனம் தயாரித்த இருமல் மருந்து அருந்திய உஸ்பெகிஸ்தான் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காம்பியாவில் 70 குழந்தைகள் இருமல் மருந்து அருந்தி உயிரிழந்த சம்பவத்தை யாராலும் மறந்திருக்க முடியாது. இந்த அதிர்ச்சியில் இருந்தே இந்தியர்கள் இன்னும் மீளாத நிலையில் உஸ்பெகிஸ்தானில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தியாவின் நொய்டாவை சேர்ந்த மேரியன் பயோடெக் என்ற தனியார் நிறுவனம் தயாரித்த Doc-1 Max இருமல் மருந்து உஸ்பெகிஸ்தானிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை அருந்திய 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் ஒருமுறை இந்தியாவிற்கு சங்கடத்தை உண்டாக்கி இருக்கிறது.
இதற்கிடையில் உஸ்பெகிஸ்தான் நாட்டு ஊடகங்களில், சம்பந்தப்பட்ட இருமல் மருந்தில் எத்திலீன் கிளைகால் என்ற வேதிப்பொருள் இருந்துள்ளது. இது மருந்துகளை ஆபத்தான ஒன்றாக மாற்றக் கூடியது.
இதை போதிய பாதுகாப்பு அம்சங்கள் எதுவுமின்றி தயாரிக்கின்றனர். இதே வேதிப்பொருள் கொண்ட இருமல் மருந்தை ஹரியானாவை சேர்ந்த மெயிடன் பார்மா என்ற நிறுவனம் தயாரித்ததன் விளைவாக காம்பியாவில் 70 குழந்தைகள் உயிரிழந்தனர். அந்த நிறுவனம் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க உரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த சூழலில் மற்றொரு துயர சம்பவம் நடந்திருப்பதாக தெரிவித்து வருகின்றன.
இதுதொடர்பாக உஸ்பெகிஸ்தான் நாட்டின் மாகாண பாதுகாப்பு சேவை வெளியிட்டுள்ள அறிக்கையில், Doc-1 Max இருமல் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இந்த மருந்தை இறக்குமதி செய்த Quramax Medical நிறுவனம் மற்றும் மருந்துகள் தரக்கட்டுப்பாடு மற்றும் நிபுணத்துவ மாகாண மையம் ஆகியவற்றின் மீது கிரிமினல் சட்டப்பிரிவு 186-3ன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை முடுக்கி விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் உள்ள மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், உஸ்பெகிஸ்தான் நாட்டு மருந்துகள் தர நிர்ணய ஆணையத்திடம் இருந்து போதிய தகவல்களை பெறும் முயற்சியில் இந்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு ஆணையம் ஈடுபட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட இந்திய நிறுவனம் பல ஆண்டுகளாக உஸ்பெகிஸ்தானிற்கு மருந்துகளை ஏற்றுமதி செய்து வந்திருக்கிறது. இப்படியொரு சம்பவம் தற்போது அரங்கேறியிருப்பது துரதிஷ்டவசமானது எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக நொய்டாவை சேர்ந்த நிறுவனத்தின் மீது மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் விசாரணையை தொடங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.
டை எத்திலீன் கிளைகால் (DEG), எத்திலீன் கிளைகால் (EG) ஆகியவை அதிக நச்சுத்தன்மை கொண்ட நிறமற்ற வேதிப்பொருட்கள். பிசுபிசுப்பான தன்மை கொண்டவை. அதேசமயம் இனிப்பு சுவையை அளிக்கக் கூடியது. எனவே தான் வாய் வழியாக உட்கொள்ளும் பல்வேறு மருந்துகளில் இதை கலப்பது தொடர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.