ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்னை ஆளுநர் மாளிகையை இன்று முற்றுகையிட முயன்றனர். மொத்தம் 3000 ஆயிரம் பேர் ஊர்வலமாக வந்ததால் சென்னை குலுங்கிய நிலையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

தமிழக ஆளுநர் ஆர்என்ரவி தமிழக அரசால் இயற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளாள். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பலபேர் தற்கொலை செய்து வரும் நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான சட்ட மசோதாவுக்கும் ஆளுநர் ஆர்என் ரவி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இதுதவிர ஆளுநர் ஆர்என் ரவி தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் சனாதன தர்மம், இந்து மதம் உள்ளிட்டவை பற்றி பேசி வருகிறார். மேலும் திராவிடத்துக்கு எதிராகவும் அவர் கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில் ஆளுநர் ஆர்என் ரவிக்கு, ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தொடர்ந்து பல்வேறு கண்டனங்களை அக்கட்சியின் தலைவர்கள் பதிவு செய்து வருகின்றனர். மேலும் ஆளுநர் ஆர்என் ரவியை திரும்ப பெற வேண்டும் திமுக அதன் கூட்டணி கட்சி எம்பிக்களுடன் கையெழுத்து பெற்று ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு கடிதம் வழங்கி உள்ளது.

இதற்கிடையே தான் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் செயல்படும் ஆளுநர் ஆர்என் ரவியை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் சைதாப்பேட்டையில் துவங்கியது. கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, தேசிய செயலாளர் டி ராஜா, மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இவர்கள் கட்சி கொடியை கையில் ஏந்தி ஊர்வலமாக ஆளுநர் மாளிகை நோக்கி சென்றனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை இடைமறித்தனர். இதையடுத்து வாக்குவாதம் ஏற்படவே டி ராஜா உள்ளிட்ட தலைவர்கள், தொண்டர்களை போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்றி அழைத்து சென்றனர். இந்த போராட்டத்தால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.