விமர்சனங்களுக்கு செயல்பாட்டால் பதிலடி தருகிறார் உதயநிதி: முதல்வர் ஸ்டாலின்!

திருச்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் உதயநிதி ஸ்டாலின் பற்றி பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி அமைச்சரான போது விமர்சனம் எழுந்ததாகவும், அந்த விமர்சனங்களுக்கு தனது செயல்பாடுகள் மூலம் அமைச்சர் உதயநிதி பதில் சொல்லி வருவதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் மீண்டும் சுற்றுப்பயணம் செல்லத் தொடங்கியிருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். இந்த நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு வந்துள்ளார். இன்று காலை 9.45 மணியளவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள், மணிமேகலை விருதுகள், மாநில அளவிலான வங்கியாளர் விருதுகளை வழங்கினார். தொடர்ந்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், சிறிய நிகழ்ச்சியையும் மாநாடு போல் நடத்துபவர் அமைச்சர் நேரு. திருச்சியில் சிறிய நிகழ்ச்சியாக இருந்தாலும் பிரம்மாண்டமாகத்தான் நடக்கும். அதுதான் திருச்சி என்று அமைச்சரை நேருவை பாராட்டினார். தொடர்ந்து மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் ஒரு ஆண்டில் 1 கோடி பேர் பயனடைந்துள்ளதாக கூறி அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு பாராட்டு தெரிவித்தார். அமைச்சர் உதயநிதி பின்னர் உதயநிதி ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், உதயநிதி அமைச்சரான போது விமர்சனம் எழுந்தது. அந்த விமர்சனங்களுக்கு தனது செயல்பாடுகள் மூலம் பதில் சொல்லி வருகிறார் அமைச்சர் உதயநிதி. உதயநிதி வகிக்கும் துறைகளை மேம்படுத்த வேண்டும் என முதல்வராக விரும்புகிறேன் என்று பாராட்டியதோடு அறிவுரையும் வழங்கினார்.

தொடர்ந்து, ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளில் தமிழக இளைஞர்கள் சாதிக்க, உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகளை வழங்க தமிழ்நாட்டின் 4 மண்டலங்களில் 4 ஒலிம்பிக் அகாடமிகள் உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தோம். அதற்கேற்ப திருச்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி மட்டுமல்லாமல் விளையாட்டிலும் தமிழ்நாடு முன்னேற்றமடைய வேண்டும். இது அமைச்சர் உதயநிதிக்கு மட்டுமல்ல, அமைச்சர் நேரு, அன்பில் மகேஷ் ஆகியோருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய அறிவிப்பு தான். திராவிட மாடல் அரசு, அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவி செய்து வருவதற்கான அடையாளம் தான் இந்த விழா. சமூகத்தின் சரிபாதியாக இருக்கும் மகளிர் சமுதாயத்திற்காக, சிறப்பு திட்டங்களை உருவாக்குவதில் திமுக எப்போதும் முனைப்புடன் இருந்து வந்திருக்கிறது. மகளிருக்கான திட்டங்கள் மகளிருக்கான வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, உள்ளாட்சி மன்றங்களில் இடஒதுக்கீடு, இலவச பேருந்து பயணம், புதுமைப் பெண் திட்டம், மகளிருக்கன சுய உதவிக்குழு என மகளிருக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மகளிரின் வாழ்வும், கல்வியும், வேலைவாய்ப்பும், பொருளாதாரமும் உயர்ந்துள்ளது.

சிறப்பாக செயல்படக் கூடிய மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு மணிமேகலை விருது வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் அது நிறுத்தப்பட்டது. ஆனால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பின், மணிமேகலை விருது வழங்கப்பட்டுள்ளது. எவ்வளவு அலட்சியப்படுத்தப்பட்டு அவமானங்களுக்கு ஆளாக்கப்பட்டாலும், எடுத்த காரியத்தை முடித்தே தீருவது என்ற திடமாக கொள்கையுடன் இருந்தால் வெற்றி கிடைத்தே தீரும் என்று சொன்னார் அண்ணா. அண்ணாவின் கூற்றுப்படி, சுய உதவிக் குழுக்கள் தொடர்ந்து முயற்சித்தால் வெற்றிக் கிடைக்கும்.

2022ஆம் ஆண்டு மட்டும் தமிழகம் முழுவதும் 8,549 கிலோமீட்டர் பயணித்திருக்கிறேன். 647 நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறேன். இது 551 நிகழ்ச்சிகள் அரசு நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகள் 96. தமிழ்நாடு முழுவதும் நலத்திட்ட உதவிகள் மூலம் பயனடைந்தோர் எண்ணிக்கை 1,03,74,355 பேர். ஓராண்டில் மட்டும் நேரடியாக நலத்திட்ட உதவிகள் சென்று சேர்ந்துள்ளது. அண்ணா – கருணாநிதி எந்த சூழலிலும் பயணமும், மக்கள் பணியும் நிறுத்தப்படவில்லை. நம்பர் 1 முதல்வர், நம்பர் 1 தமிழ்நாடு என்பதற்கான உண்மையான அளவுகோல், ஏழையின் சிரிப்பும், மகளிரின் மகிழ்ச்சியும் தான். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று அண்ணா சொன்னார். ஆனால் ஏழையின் சிரிப்பில் அண்ணாவையும், கருணாநிதியையும் காண்போம் என்பதே என் கொள்கை என்று தெரிவித்தார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 33 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவில் பாலக்கிருஷ்ணம்பட்டி, உப்பிலியபுரம், கூத்தப்பார், ச. கண்ணனூர், சிறுகமணி ஆகிய பேரூராட்சிகளிலும், இலால்குடி, மணப்பாறை ஆகிய நகராட்சிகளிலும் மேம்படுத்தப்பட்ட பூங்காங்கள் மற்றும் சாலைகள், புதிய பாலங்கள், குழந்தைகள் மையம், உயர்கோபுர மின் விளக்குகள் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மணப்பாறை வட்டாரம் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதல் கட்டடங்கள், வாரச்சந்தையில் நுண் உரம் தயாரிக்கும் மையம், உயர்கல்வித் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி, ஈவெ.ரா. பெரியார் கல்லூரி வளாகத்தில் 60 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தேர்வுக் கட்டுப்பாட்டு மையத்திற்கான புதிய கூடுதல் அலுவலகக் கட்டடம்; வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 2 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் திருச்சிராப்பள்ளி – கிழக்கு மற்றும் மேற்கு, சிறுகாம்பூர், துறையூர், மணப்பாறை, வையம்பட்டி, வளநாடு, தொட்டியம், சோமரசம்பேட்டை, மணிகண்டம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளருக்கான குடியிருப்புடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள், மணப்பாறையில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் குடியிருப்புக் கட்டடம் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.

உயர்கல்வித் துறை சார்பில் மணப்பாறை வட்டம், பண்ணப்பட்டி மேல்பாகம் கிராமத்தில் ரூபாய் 14 கோடியே 95 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிக் கட்டடம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 7 கோடியே 25 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மணப்பாறை நகராட்சி – புத்தாநத்தம், திருமலையான்பட்டியில் புதிய துணை சுகாதார நிலையம் மற்றும் இலால்குடி அரசு மருத்துவமனையில் 50 படுக்கைகளுடன் கூடிய தாய்-சேய் நலக் கட்டடங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் 6.86 கோடி ரூபாய் மதிப்பில் 1448 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் பிரதமமந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 33.40 கோடி ரூபாய் மதிப்பில் 1392 பயனாளிகளுக்கு குடியிருப்புகள், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டிகள், கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை என 77.02 இலட்சம் ரூபாய் மதிப்பில் 11,746 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர். எண்ணற்ற பயனாளிகள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம், நுண்ணீர் பாசனத் திட்டம், நெல் விதைகளுக்கான உற்பத்தி மானியம், எண்ணெய் வித்து உற்பத்தி மானியம் என 1.16 கோடி ரூபாய் மதிப்பில் 354 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் பண்ணை குட்டை அமைத்தல், சோலார் மின் மோட்டார் அமைத்தல், மானியத்தில் மின் மோட்டார் வழங்குதல், உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மதிப்புக்கூட்டு இயந்திரங்கள் வழங்குதல் என 2.48 கோடி ரூபாய் மதிப்பில் 147 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், கூட்டுறவுத் துறை சார்பில் பயிர்கடன், மத்தியக்காலக் கடன், சம்பளச் சான்று கடன், மகளிருக்கான கடன், கைம்பெண்களுக்கான கடன் என 6.58 கோடி ரூபாய் மதிப்பில் 715 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள், மூன்று சக்கர சைக்கிள்கள், ஊன்றுகோல், சிறு,குறு தொழில்களுக்கான வங்கிக்கடன், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் என 57.71 இலட்சம் ரூபாய் மதிப்பில் 591 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.