மொழி பிரச்சினையை தூண்டுவதாக சித்தார்த் மீது இந்து மக்கள் கட்சி புகார்!

மொழி பிரச்சினையை தூண்டும் வகையில் நடிகர் சித்தார்த்தின் சமூக வலைத்தள பதிவு இருப்பதாக அவர் மீது இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் மதுரை காவல் ஆணையரிடம் சித்தார்த்திற்கு எதிராக புகார் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சித்தார்த். தமிழ், தெலுங்கு என ஏராளமான படங்களில் சித்தார்த் நடித்துள்ளார். சுமார் 20 ஆண்டு காலமாக தமிழ் திரையுலகில், நடித்து வரும் சித்தார்க்த் சினிமா தாண்டி பொது விவகாரங்களிலும் வெளிப்படையாக பேசக்கூடியவர். கடந்த அதிமுக ஆட்சியின் போது பொது விவகாரங்கள் குறித்து அதிகம் பேசியதாகவும் தற்போது பல்வேறு விவகாரங்களில் மவுனம் காப்பதாகக் கூட சமீப காலமாக சித்தார்த் மீது ஒரு விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று முன் தினம் நடிகர் சித்தார்த் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஒரு கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

சித்தார்த் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டு இருந்த பதிவில் கூறியிருப்பதாவது:-

“காலியாக இருந்த மதுரை விமான நிலையத்தில் சுமார் 20 நிமிடங்கள் காத்திருக்க வைத்து சி.ஆர்.பி.எப் அதிகாரிகள் தன்னையும் தனது பெற்றோரையும் துன்புறுத்தினார்கள். எனது பெற்றோர்களின் பைகளில் இருந்த காயின்களை எடுக்குமாறு கூறினர். தொடர்ந்து எங்களிடம் இந்தியில் பேசிக்கொண்டு இருந்தனர். ஆங்கிலத்தில் பேசுமாறு வலியுறுத்திய போதும் தொடர்ந்து இந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டனர். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த போது இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் என்றும் கூறினர். வேலையில்லாதவர்கள் தங்கள் அதிகாரத்தை காட்டுகின்றனர்” இவ்வாறு சித்தார்த் பதிவிட்டு இருந்தார். ஆனால், விமான நிலையத்தில் சித்தார்த் கூறியது போல ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்றும் விமான நிலைய அதிகாரிகள் கூறியதாக இன்று காலை தகவல் வெளியாகி இருந்தது.

பின்னர், இது தொடர்பாக சித்தார்த் இன்று மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ஒரு விளக்கத்தை அளித்து இருந்தார். அதில், “மதுரை விமான நிலையத்தில் இருந்த சி.ஐ.எஸ்.எப் அதிகாரி எங்களிடம் கடுமையாக நடந்து கொண்டதோடு பையில் இருந்த உபகரணங்களை தூக்கி எறிந்தார். ஆங்கிலத்தில் பேசுங்கள் என தொடர்ந்து சொன்ன போதும் கூட இந்தியில் தான் பேசினார். இப்படித்தான் நடந்து கொள்வீர்களா? நான் முகக்கவசத்தை கழற்றிய பிறகு என்னை செல்ல அனுமதித்தனர். நான் ஒரு பிரபலம் என்பதால் எனக்கு அனுமதி கொடுத்தீர்கள். பொதுமக்களிடம் இப்படித்தான் நடந்து கொள்வீர்களா? என்று கேட்டேன்” என்று தனது தரப்பில் நடந்தவற்றை இன்று மீண்டும் குறிப்பிட்டு பதிவிட்டு இருந்தார்.

மதுரை விமான நிலையத்தில் தன்னிடம் இந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மீது சித்தார்த் முன்வைத்த குற்றச்சாட்டு பல்வேறு விவாதத்தை கிளப்பி விட்டுள்ளது.

இந்த நிலையில், மொழி பிரச்சினையை தூண்டும் வகையில் நடிகர் சித்தார்த்தின் சமூக வலைத்தள பதிவு இருப்பதாக மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் சித்தார்த் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் மதுரை காவல் ஆணையரிடம் சித்தார்த்திற்கு எதிராக புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் சித்தார்த் வேண்டுமென்றே தமிழகத்தில் மொழியை வைத்து குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பதாக குற்றம் சாட்டி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை திருமங்கலம் அருகே உள்ள தனியார் உணவு விடுதிக்கு வந்த மத்திய விமானம் மற்றும் தரைவழி போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங்கை சந்தித்து பாஜக மாநில பிற்படுத்தப்பட்டோர் நல பிரிவு செயற்குழு உறுப்பினர் சங்கர் பாண்டி புகார் மனு அளித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த சங்கர் பாண்டி, “சித்தார்த் நன்றாக இந்தி பேசுவார். அவரது குடும்பத்தினரும் இந்தி பேசுவார்கள். அப்படி இருந்தும் வேண்டுமென்றே நடிகர் சித்தார்த் இந்தியில் பேசச் சொல்லி கட்டாயப்படுத்தியதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். ஆனால், அன்றைய தினம் விமான நிலையத்தில் பணியில் இருந்தவர்கள் தமிழ் பேசக்கூடிய தமிழகத்தை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர்கள் என விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்கள். எனவே, மொழி பிரச்சனையை வைத்து குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் நடிகர் சித்தார்த் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உரிய விசாரணை நடத்தி சித்தார்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இரண்டு ஆண்டுகள் விமான பயணத் தடை விதிக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்” என்றார்.