இந்திய விமானப்படையும், கப்பற்படையும் இணைந்து பிரமோஸ் ஏவுகணையை வெறிகரமாக சோதித்து பார்த்திருக்கிறது. சுகோய் போர் விமானம் மூலம் இந்த ஏவுகணை சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது.
கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020ம் ஆண்டு சீன வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே நடந்த மோதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து இரு தரப்பிலும் இந்த பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில் பிரச்னை ஓய்ந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டிருந்தபோது மீண்டும் அருணாச்சலப் பிரதேச எல்லையில் சீன வீரர்கள் அத்துமீறினர். இதனை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தாலும் எதிர் வரும் நாட்களில் இப்பிரச்னை பெரியதாக வெடிக்கும் அபாயம் மேலெழுந்திருக்கிறது. இதனை பேச்சுவார்த்தை மூலம் தடுக்க ஒரு பக்கம் முயற்சி செய்து வந்தாலும் எதிர்பாராத தாக்குதலை சமாளிக்க இந்தியா முழுயாக தயாராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதேபோல சில அரசியல் தலைவர்களும் போர் குறித்த அச்சத்தை எழுப்பி இருந்தனர். ராகுல் காந்தி இந்த மோதல் சம்பவம் குறித்து கூறும் போது, “முன்னர் பாகிஸ்தான்-சீனா என இரண்டு நாடுகள் தனித்தனியாக இருந்தன. தற்பொது இது நாடுகளும் ஒன்றிணைந்துள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த கூற்றுக்கு ஏற்றார் போல் இலங்கையில் சீன உளவு கப்பல் ரோந்து மேற்கொள்வதும், பாகிஸ்தான் எல்லையில் ட்ரோன் மூலம் அடிக்கடி ஊடுறுவல் முயற்சிகளும் நடைபெறுவதும் இயல்பாகியுள்ளன. எனவே இந்திய ராணுவம் தனது பலத்தை அதிகரிக்க தொடங்கியது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சுமார் 2,289 கி.மீ தொலைவு எல்லையாக இருக்கிறது. இதில் 192 நீளமுள்ள முன் பகுதியை இரண்டு நாடுகளும் பகிர்ந்துகொள்கின்றன. இந்த பகுதியில் ஏற்கெனவே 26 கி.மீ நீளத்தில் எல்லையை பலப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் தற்போது மேலும் 33 கி.மீ தொலைவுக்கு பலப்படுத்தும் பணியை BSF செய்து வருகிறது. ஏவுகணை அதேபோல இரு நாட்டு எல்லைகளில் சுமார் 120 ‘பிரளய்’ ஏவுகணைகளை நிலைநிறுத்த ராணுவம் திட்டமிட்டிருந்தது. இதற்கு பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் எந்தெந்த பகுதியில் எவ்வளவு ஏவுகணைகள் நிலை நிறுத்தப்படும் என்கிற விவரங்களை ராணுவம் வெளியிடவில்லை. இந்த ஏவுகணையானது 150 கி.மீ முதல் 500 கி.மீ தூரம் வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும். இதன் மூலம் சுமார் 10 மீட்டர் அளவிலான இடத்தை தடம் தெரியாமல் அழித்துவிட முடியும். இது பிரஹார், பிருத்வி-2 மற்றும் பிருத்வி-3 ஆகிய ஏவுகணைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இது தரையிலிருந்து ஏவப்படும் ஏவுகணையாகும். இதன் மூலம் தரையில் உள்ள மற்றொரு இலக்கைதான் தாக்கி அழிக்க முடியும். கப்பல் உள்ளிட்டவற்றை தாக்க முடியாது.
இந்நிலையில் நிலம் மற்றும் நீரில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் ‘பிரமோஸ்’ ரக ஏவுகணையை இந்திய விமானப்படை தற்போது வான்வெளியிலிருந்து வெற்றிகரமாக பரிசோதித்திருக்கிறது. இந்த ஏவுகணை விமானம் மூலம் சோதனை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இது 400 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும். இது தற்போது வங்கக்கடலில் சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. சோதனைக்காக வைக்கப்பட்ட கப்பலை ஏவுகணை துல்லியமாக தாக்கியுள்ளது. இந்த ஏவுகணை சுகோய் -30 எனும் போர் விமானத்திலிருந்து ஏவப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் இந்த விமானத்தில் K-100 எனும் ஏவுகணைதான் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பிரமோஸ் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.