பாகிஸ்தானின் சின்ஜோரோ நகரில் நேற்று இந்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சி செனட்டரான கிருஷ்ண குமாரி தனது டுவிட்டர் பக்கத்தில், “40 வயது விதவை கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உள்ளார். அவரது உடல் மிகவும் மோசமான நிலையில் சிதைக்கப்பட்டு உள்ளது. அவரது தலை உடலில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு உள்ளது. தலை முழுவதும் உள்ள சதையை காட்டுமிராண்டிகள் அகற்றியுள்ளனர். போலீஸ் குழுக்கள் சின்ஜோரோ பகுதிக்கு விரைந்து உள்ளனர் என கூறி உள்ளார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஜியாலா அமர் லால் பீல், ‘சிதைக்கப்பட்ட உடல் நேற்று வயலில் கண்டெடுக்கப்பட்டதாகவும், அந்தப் பெண்ணின் குடும்பத்தினரிடமிருந்து போலீசார் விவரங்களை சேகரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவரின் உடல் மற்றும் முகத்தில் இருந்து தோல் உரிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மேலும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது .அந்தப் பெண்ணுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்’ என கூறினார்.
இந்த நிலையில், பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வலியுறுத்தியுள்ளார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
இந்த சம்பவம் தொடர்பான விரிவான அறிக்கை எதுவும் எங்களிடம் இல்லை. பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்கு அந்நாடு தான் பொறுப்பு. சிறுபான்மையினர் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கான தனது பொறுப்பை பாகிஸ்தான் நிறைவேற்ற வேண்டும் என கடந்த காலங்களில் நாங்கள் கூறியுள்ளோம். நான் அதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் இவ்வாறு அவர் தெரிவித்தார்.