ரிமோட் வாக்குப் பதிவு முறை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு மாநில தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சொந்த ஊர்களை விட்டு பிழைப்புக்காகவும் கல்விக்காகவும் வேறு இடங்களில் தங்கியுள்ள நபர்கள் தேர்தல் நேரத்தில் ஒரு நாளில் சென்று வாக்களித்துவிட்டு வர முடியாது என்பதால் பலர் வாக்களிக்க செல்வதையே விட்டுவிடுகிறார்கள். இதனால் ஒவ்வொரு தேர்தலின் போது வாக்குப் பதிவு 90 சதவீதத்தை கூட தாண்டுவதில்லை. வெளி ஊர்களில் இருக்கும் தொழிலாளர்கள் வாக்களிக்க ஏதுவாக ரிமோட் வாக்குப் பதிவு முறையை அமல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக அரசியல் கட்சித் தலைவர்களை கருத்து கேட்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஜனவரி 16 இல் அரசியல் கட்சிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்படவுள்ளது. ஜனவரி 31 ஆம் தேதிக்குள் அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்டு முடிக்கவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் ரிமோட் வாக்குப் பதிவு தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு அரசியல் கட்சிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. அந்த வகையில் அதிமுகவுக்கும் மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அழைப்பு விடுத்துள்ளார். அவர் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளார். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வரவு செலவு கணக்குகளை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்ட நிலையில் தற்போது மாநில தேர்தல் ஆணையத்தின் கடிதம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக யாருக்கு என்பது தொடர்பாக இரட்டைத் தலைமைகளாக இருந்த ஓபிஎஸ்- எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் இரு அணிகளாக பிளவுப்பட்டு காணப்படுகிறார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் கட்சியிலிருந்து நீக்குவதாக அறிக்கை வெளியிடுகிறார்கள். அது போல் இரு தரப்பினரும் தங்கள் ஆதரவாளர்களுக்கு புதிய பதவிகளை கொடுத்து வருகிறார்கள். இடைக்கால பொதுச் செயலாளர் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்களை நீக்கிவிட்டு புதிய மாவட்டச் செயலாளர்களை எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார். அது போல் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை ஓபிஎஸ் நீக்கி வருகிறார்.
இந்த நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிட்டு கட்சியின் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்தார். இதை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டு இணையதளத்திலும் பதிவேற்றம் செய்துள்ளது. எனவே உண்மையான அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்புதான் என்பதை தேர்தல் ஆணையமே ஒப்புக் கொண்டதாக அந்த அணியினர் குஷியில் இருந்தனர். இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் ஏற்கெனவே தங்கள் பதிவேட்டில் உள்ளது போல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.