வேட்டி சேலை திட்டம் தொடர்பாக பதில் தந்து நேரத்தை செலவழிக்காமல் பலன்களை மக்களிடத்திலே கொண்டுபோய் சேர்ப்பதிலே அரசு கவனம் செலுத்த வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளதாவது:-
ஒவ்வொரு ஆண்டும், தைப்பொங்கலுக்கு விலையில்லா வேஷ்டி, சேலை வழங்குகிற மகத்தான திட்டம் ஆண்டு முழுவதும், கைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும், வாழ்வாதாரத்தை உயர்த்தும் வண்ணமும் எம்ஜிஆரால் 1983 ஆம் ஆண்டு விலையில்லா வேஷ்டிகளை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டதை இந்த நாடு நன்கு அறிவோம். அதைத் தொடர்ந்து ஜெயலலிதா இந்த விலையில்லா வேஷ்டி, சேலை திட்டத்தில் முழு தரத்தோடு அமைய வேண்டும் என்கிற அந்த உன்னத நோக்கத்தோடு, விலையில்லா வேஷ்டி சேலைகளின் தரம் மேலும் மேம்படுத்தப்பட்டதை இந்த நாடு நன்கு அறியும். அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அம்மா அரசிலே 2021 ஆம் ஆண்டு பொங்கலுக்கு முன்பாக 2 கோடியே 6 லட்சம் குடும்பங்களுக்கு, தைத்திருநாள் தமிழகத்தில் நாளை முன்னிட்டு 2,500 ரூபாய் ரொக்கம், பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், உலர் திராட்சை, முந்திரி, ஒரு நீளமுழு கரும்பு இதோடு, ஒரு கோடி 80லட்சத்து 42 ஆயிரம் பெண்களுக்கு சேலைகள், ஒரு கோடியே 80 லட்சத்து 9 ஆயிரம் ஆண்களுக்கு வேஷ்டிகள் வழங்கப்பட்டது. இதையெல்லாம் இந்த நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். தற்போது வேட்டி,சேலைகள் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகளை எடப்பாடி, அரசுக்கு அறிக்கையை, கோரிக்கையை, கண்டனத்தையும், எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார் .
2023 ஆம் ஆண்டு தை பொங்கலுக்கு வழங்க வேண்டிய வேஷ்டி,சேலை நெய்யும் பணியில் இந்த திராவிட முன்னேற்றக் கழக அரசினுடைய நிர்வாக குளறுபடிகளால், இன்றைக்கு முடக்கிப் போய் இருப்பதால், நெசவாளர்களுக்கு கூட்டுறவு சொசைட்டிகளை சேர்ந்தவர்களுக்கும் பேராபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருப்பதை எடுத்துச் சொல்லி, ஜூலை மாதமே வழங்க வேண்டிய நூல் நெய்யும் உத்தரவுகள் அக்டோபர் மாதம் தான் வழங்கப்பட்டுள்ளது என்பதையும், ஆகஸ்ட் மாதத்திலே வழங்கப்பட வேண்டிய நூல் நவம்பர் இறுதியிலும் டிசம்பர் முதல் வாரத்தில் தான் வழங்கப்பட்டது. இதனால் மிகப் பெரிய நிர்வாகக் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு, துணி நெய்துகொண்டிருக்கிற நூல் அறுந்து துண்டு துண்டாக விழுவதாகவும், துணி நெய்ய முடியாமல் நெசவாளர்கள் பரிதவிக்கின்றார்கள். இதனால் 90 சதவீத நெசவாளர்கள் தங்களுக்கு சப்ளை கொடுக்கப்பட்ட நூல்களை அரசுக்கே திருப்பி அனுப்பி வருவதாகவும், தரமான நூல் தந்தால் தான் வேட்டி,சேலை தயாரிக்க முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வந்து கொண்டிருப்பதை, நெசவாளர்களின் பாதுகாவலர் எடப்பாடி பழனிசாமி ஆணித்தரவாக அரசின் கவனத்திற்கு எடுத்து வைத்தார். இதன் காரணமாக தைப்பொங்கலுக்கு ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் உடுத்த உடை என்ற எம்ஜிஆர் அவர்களின் திட்டம் மக்களுக்கு சென்று சேருமா என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இந்த திட்டம் பாலாகும் சூழ்நிலையை இந்த அரசு ஏற்படுத்தி இருப்பதாக இன்றைக்கு நாடு முழுவதும் பேச்சு எழுந்திருக்கிறது. வேட்டி,சேலை வழங்காவிட்டால் நெசவாளர்கள் இன்றைக்கு வேலை இழந்து தவிக்கின்ற அந்த குடும்பங்களையும் ஏமாற்றப்படும். இதை கண்டித்து, ஏழை எளிய மக்களையும் ஒன்றிணைத்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கூறியிருக்கிற அந்த குற்றச்சாட்டுகளுக்கு, கைத்தறி துறை அமைச்சரின் பதில் உரிய பதிலாக தெரியவில்லை.
கடந்த ஆண்டும் இதுகுறித்து சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில்கள் கூறப்பட்டதையொழிய, மக்களுக்கு பலன்கள் கிடைக்கவில்லை. ஆகவே பதில் சொல்வதிலே நீங்கள் வல்லவராக இருக்கலாம், ஆனால் மக்களுக்கு பலன்கள், திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் இந்த அரசு தோல்வி அடைந்திருக்கிறது. வேட்டி, சேலை திட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடுத்து வைத்திருக்கிற கண்டன குரலுக்கு சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் கூறி இருக்கிற பதில் வளவள, கொளகொளவாக, கழுவுற மீனில் நழுவுகிற மீனாகத்தான் இருக்கிறதே தவிர, உள்ளபடியே உண்மையை எடுத்துச் சொல்லுகிற அறிக்கையாக அமையவில்லை. நீங்கள் பதில் தந்து நேரத்தை செலவழிக்காமல் பலன்களை மக்களிடத்திலே கொண்டுபோய் சேர்ப்பதிலே கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.