தமிழ்நாட்டில் பாமகவிற்கு ஏற்ப களம் தயாராக இருக்கிறது: அன்புமணி ராமதாஸ்

பாமக பொதுக்குழு கூட்டத்தில், தமிழ்நாட்டில் பாமகவிற்கு ஏற்ப களம் தயாராக இருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம், ”2022-ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்; 2023-ஆம் ஆண்டை வரவேற்போம்” என்ற தலைப்பில் இன்று நடைபெற்றது. புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில், சுங்கச்சாவடி அருகில் உள்ள சங்கமித்ரா திருமண அரங்கத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு, ஆன்லைன் ரம்மிக்கு தடை உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் அன்புமணி ராமஸ்தாஸ் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் பாமகவிற்கு ஏற்ப களம் தயாராக இருக்கிறது. மற்ற கட்சிகளை பார்த்தால், களைந்து, பிரிந்து, உடைந்து, தேய்ந்து போய் இருக்கும் சூழல் நிலவி வருகிறது. பாமக மட்டுமே வேகமாக நடந்து வருகிறது. சில கட்சிகள் விளம்பர அரசியல் செய்கிறார்கள். சில கட்சிகளின் பேச்சில் சத்தம் மட்டுமே வருகிறது. உள்ளே ஒன்றுமில்லை. எந்த கட்சி என்பது அனைவருக்கும் தெரியும். அவர் என்ன பேசுகிறார் என்று அவருக்கும் தெரியாது, மற்றவர்களுக்கும் தெரியாது. ஆனால் செய்தி வரவேண்டும் என்று பேசுகிறார். ஆனால் பாமக நிதானமாகவும், வலுவாகவும் முன்னேறி வருகிறது.

சிலர் என்னிடம் மற்ற கட்சிகளை பற்றி பேசுவார்கள். ஒருவர் வாட்ச் எல்லாம் காட்டுகிறார் என்று சொல்வார்கள். இன்னொருவர் அடுக்குமொழியில் பேசுகிறார் என்பார்கள். அதெல்லாம் நமக்கு வராது. அது தேவையும் இல்லை. எப்போதும் நாம் வளர்ச்சியை நோக்கியே செல்கிறோம். நமக்கான அங்கீகாரம் வந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் தமிழ்நாட்டு மக்களுக்கு வேறு வழியில்லை. 55 ஆண்டுகாலம் இரு கட்சிகள் ஆட்சி செய்து, மக்கள் மத்தியில் ஒரு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் மட்டுமே இது நமக்கேற்ப சூழல் என்று கூறினேன். அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளுக்கு பாமக மட்டுமே இருக்கிறது. மீதமுள்ள கட்சிகளிடம் வெறும் சத்தம் மட்டுமே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.