கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) 2 கட்சிகள் குடும்ப அரசியலை செய்கின்றன என்று மந்திரி அமித்ஷா கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
மண்டியா மாவட்ட பா.ஜனதா சார்பில் ஜனசங்கல்ப யாத்திரை மாநாடு மண்டியாவில் நேற்று நடைபெற்றது. இதில் உள்துறை-கூட்டுறவுத்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-
இந்தியா மீதும், இந்திய மக்கள் மீதும் உண்மையான அக்கறைக் கொண்ட கட்சி பாஜக. நாட்டின் பாதுகாப்பில் எந்த ஒரு சூழ்நிலையிலும் பாஜக சமரசம் செய்து கொள்ளாது. நாடு முழுவதும் பிஎப்ஐ அமைப்புக்கு தடைவிதிக்கப்பட்டதே இதற்கு உதாரணம். நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அந்த அமைப்பு செயல்பட்டு வந்தது. மேலும், பல பயங்கரவாத அமைப்புகளுடனும் அந்த அமைப்பினருக்கு தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டது. அதனால்தான், பிஎப்ஐ அமைப்புக்கு மத்திய பாஜக அரசு தடைவிதித்தது. பிஎப்ஐ-க்கு தடைவிதித்தால் பாஜகவுக்கு பாதிப்பு ஏற்படும் என சிலர் கூறினர். ஆனால், எதற்கும் பயப்படாமல் அந்த அமைப்புக்கு தடைவிதிக்கும்முடிவை நாங்கள் எடுத்தோம்.
பாஜக அரசின் நடவடிக்கை இது என்றால், காங்கிரஸ் நடவடிக்கை எப்படி இருந்தது தெரியுமா? கர்நாடகாவில் பிஎப்ஐ அமைப்பினர் ஆயிரக்கணக்கானோர் மீது ஏராளமான வழக்குகள் இருந்தன. அந்த வழக்குகள் யாவும், நாட்டின் பாதுகாப்புக்கு எதிரானவை ஆகும். ஆனால், அப்போதைய முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், பிஎப்ஐ அமைப்பினர் 1,700 பேர் மீதான வழக்குகள்அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. காங்கிரஸின் இந்த செயலுக்கு பின்னால் வாக்குவங்கி அரசியலை தவிர வேறு என்ன இருக்க முடியும்?. பாஜகவோ இதுபோன்ற வாக்கு வங்கி அரசியலை நடத்தாது. எந்த சமூகத்தையும், மதத்தினரையும் திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபடாது. அனைவருக்குமான வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற கொள்கையில் உறுதியாக இருக்கும் கட்சி பாஜக. நாட்டின் பாதுகாப்பிலும், இறையாண்மையிலும் ஒரு சிறிய சமரசத்தை கூட பாஜக செய்து கொள்ளாது. கர்நாடகாவின் பாதுகாப்பை பாஜகவை தவிர வேறு எந்தக்கட்சியாலும் உறுதி செய்ய முடியாது.
மண்டியா, மைசூரு மண்டலத்தில் ஜனதா தளம் (எஸ்) -காங்கிரஸ், கட்சிகளுக்கு நீங்கள் வாய்ப்பு கொடுத்தது போதும். இந்த முறை பா.ஜனதாவை நீங்கள் முழு மெஜாரிட்டியுடன் வெற்றி பெற வைக்க வேண்டும். காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் குடும்ப அரசியலை செய்கின்றன. அந்த கட்சிகள் ஊழல் கொள்ளையை நடத்துகின்றன. இந்த 2 கட்சிகளின் ஆட்சியையும் நாங்கள் பார்த்துள்ளோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அது டெல்லியின் ஏ.டி.எம். ஆக செயல்படும். ஜனதா தளம் (எஸ்) ஆட்சி செய்தால், அது ஒரு குடும்பத்தின் ஏ.டி.எம். ஆக இருக்கும். இந்த 2 கட்சிகளும் ஊழல்கள் மூலம் கர்நாடகத்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தியுள்ளன. அதனால் ஊழல், குடும்ப அரசியலில் இருந்து கர்நாடகத்தை விடுவிக்க வேண்டும்.
கர்நாடகத்தில் முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி செய்ய பா.ஜனதாவுக்கு நீங்கள் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் இரட்டை என்ஜின் அரசை கொண்டு வர வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் தலைமையில் கர்நாடகத்தை வளர்ச்சியின் பாதைக்கு கொண்டு செல்வோம். காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் ஊழல், மதவாத அரசியல் செய்கின்றன. மேலும் குற்றம் செய்வோரை பாதுகாக்கின்றன. கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தோ்தலின்போது, நான் முதலில் மண்டியாவில் இருந்து தான் பிரசாரத்தை தொடங்கினேன். அப்போது பா.ஜனதா அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று பெரிய கட்சியாக வந்தது. 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 52 சதவீத வாக்குகளை பெற்றது. அதில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 25 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றது. இவ்வாறு அமித்ஷா கூறினார்.