தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் அட்டை எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் உள்ளன. இவற்றை தவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகள், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் இருக்கின்றன. தொழில் நிறுவனங்களை தவிர பிற அனைத்து மின் இணைப்புதாரர்களும் தங்களுடைய மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் தெரிவித்தது. இணையதளம் மூலமாகவும் நேரடியாகவும் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று தெரிவித்த மின்சார வாரியம் நேரடியாக ஆதார் எண்ணை இணைக்க வசதியாக சிறப்பு முகாம்களையும் அமைத்தது. 2,811 சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் உள்ள மின்சார அலுவலகங்களில் 2,811 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் நடந்து வந்தன. கடந்த மாதம் 15 ஆம் தேதி இந்தப் பணிகள் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இந்த முகாம்கள் மூலமாகவும் ஆன்லைன் மூலமாகவும் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். பண்டிகை நாட்கள் தவிர ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
இந்த நிலையில், ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (டிச.31) நிறைவு அடைகிறது. இன்னும் 1 கோடிக்கும் மேற்பட்ட மின் இணைப்புதாரர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்பதே மின் நுகர்வோர்களின் கருத்தாக உள்ளது.
இந்த நிலையில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:-
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால நீட்டிப்பு வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் முதல்வரின் அனுமதி பெற்று மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது வரும் ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31 க்கு பிறகு மீண்டும் கால நீட்டிப்பு இருக்கும் என்ற நிலையில் இருந்துவிட வேண்டாம். வரும் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைத்து விடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தற்போது பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இனி அந்தந்த பகுதிகளுக்கே நேரடியாக சென்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலமாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வ்ரு அவர் கூறினார்.