துயரங்கள் துடைத்தெறியப்படும், மகிழ்ச்சி மலரும்: ராமதாஸ் வாழ்த்து!

மகிழ்ச்சியை வழங்கும் என்ற நம்பிக்கையுடன் 2023-ஆம் ஆண்டை வரவேற்று கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

ஒவ்வொரு புத்தாண்டும் எல்லையில்லாத நம்பிக்கைகளுடன் தான் பிறக்கின்றன. ஆனால், அந்த ஆண்டின் நிறைவு சோதனைகளுடன் தான் முடிகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டில் தொடங்கி, 2023-ஆம் ஆண்டு வரை கடந்த 4 ஆண்டுகளாக புத்தாண்டுடன் தவிர்க்க முடியாமல் இணைந்திருக்கும் விஷயம் கொரோனா தான். கடந்த மூன்று ஆண்டுகளாக நாட்டையும், மக்களையும் மிரள வைத்த கொரோனா இப்போது புதிய வடிவத்தில் உருமாறி நம்மை மிரட்டிக் கொண்டிருக்கிறது. கடந்த காலங்களைப் போலவே நடப்பாண்டிலும் கொரோனாவைக் கடந்து முன்னேற்றப் பாதையில் நாம் நடைபோட்டுத் தான் தீர வேண்டும். 2023-ஆம் ஆண்டும் மலர்ப்பாதை விரித்து நம்மை வரவேற்பதாகத் தெரியவில்லை. ஒருபுறம் உருமாறிய கொரோனாவும், இன்னொருபுறம் பொருளாதார மந்த நிலையும் நம்மை கொண்டிருக்கின்றன. கடந்த காலங்களில் எத்தனையோ, நெருக்கடிகளை சந்தித்த நாம், இந்த நெருக்கடியிலிருந்தும் மீண்டு வருவோம்.

நம்பிக்கை தான் வாழ்க்கை. கடந்த சில ஆண்டுகளின் துயரங்கள் அனைத்தும் துடைத்தெறியப்படும்; அனைத்து துறைகளிலும் இதுவரை இல்லாத முன்னேற்றங்கள் எட்டப்படும் என்ற நம்பிக்கையுடன் புதிய ஆண்டை வரவேற்போம். புத்தாண்டு நமக்கு மகிழ்ச்சி, மட்டற்ற மகிழ்ச்சியை மட்டுமே அளிக்கும். கரடுமுரடான பாதைகள் நாம் கடந்து வந்த கரடுமுரடான பாதைகள் முடிவுக்கு வந்து விட்டன. இனி மலர்ப்பாதையில் தான் நாம் பயணிக்கப் போகிறோம். அதன் பயனாக 2023-ஆம் ஆண்டு நாம் எதிர்பார்த்ததைப் போலவே இனிப்பாக அமையும். அனைவருக்கும் அனைத்து நலன்களும், வளங்களும் கிடைக்கும்; பொருளாதாரம் வளரும்; மகிழ்ச்சி பெருகும்; அமைதியும், நிம்மதியும் கிடைக்கும்; அவற்றை சாதிக்க நாம் கடுமையாக உழைப்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.