புத்தாண்டு கொண்டாடுவதற்காக கோவாவிற்கு காரில் சென்ற தமிழகத்தை சேர்ந்தவர்கள், கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு சொந்த ஊர் திரும்பியுள்ளனர். வரும் வழியில் கர்நாடக மாநிலத்தில் அவர்கள் வந்த கார் விபத்தில் சிக்கியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.
உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆங்கில புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர். தமிழகம் உள்பட இந்தியாவிலும் ஆங்கில புத்தாண்டை மக்கள் கோலாகலமாக கொண்டாடி வரவேற்றனர். இளம் வயதினர் நள்ளிரவில் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வரவேற்று மகிழ்ந்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது துரதிர்ஷ்டவசமாக சில விபத்து சம்பவங்களும் நடைபெற்று ஆண்டின் முதல் நாளிலேயே சோகத்தையும் கொடுப்பதாக அமைந்து இருக்கிறது. அந்த வகையில், கோவாவில் புத்தாண்டு கொண்டாடிவிட்டு தமிழகம் திரும்பிக்கொண்டு 4 பேர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் இருக்கும் அங்கோலா தாலுகாவிற்கு உள்பட்ட பலேகுலி என்ற நெடுஞ்சாலையில் நேற்று விபத்து ஏற்பட்டது. அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. எதிர்திசையில் வந்து கொண்டிருந்த கார் ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புகளை தாண்டி பேருந்து மீது மோதியது. இந்த பயங்கர விபத்தில் காரின் ஒருபக்கம் சுக்கு நூறாக நொறுங்கியது. விபத்தில் சிக்கிய காரில் பயணித்த 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். காரில் இருந்த மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து பிற வாகன ஓட்டிகள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் மீட்பு பணிகளை முடுக்கிவிட்டனர். இந்த விபத்து குறித்தும் விபத்தில் சிக்கியவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் விபத்தில் சிக்கி உயிரிழந்த 4 பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் வெளியாகியுள்ளது. கோவாவில் புத்தாண்டு கொண்டாடிவிட்டு சொந்த ஊர் திரும்பும் வழியில் கார் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த அருண் பாண்டியன், ஆனந்த் சேகர், நந்தகுமார், ஜேம்ஸ் ஆல்பர்ட் ஆகியோர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 3 பேரும் மருத்த்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புத்தாண்டு கொண்டாடிவிட்டு வந்ததால் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் காரை ஓட்டினாரா? அல்லது மது போதையில் இருந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் சென்னையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.