தலைநகர் டெல்லியில் ஸ்கூட்டியில் சென்ற இளம்பெண் மீது கார் மோதியதில், காருக்கு அடியில் சிக்கி அந்த இளம்பெண் 12 கி.மீ தூரம் இழுத்து செல்லப்பட்டு பலியான சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் புத்தாண்டு தினத்தன்று அதிகாலையில் ஸ்கூட்டியில் சென்ற இளம் பெண் மீது மோதிவிட்டு நிற்காமல் கார் சென்றதாகவும் அந்த காருக்கு அடியில் சிக்கிய இளம்பெண் 12 கி.மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதில் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இளம்பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ள நிலையில் நெஞ்சை உறைய வைக்கும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
டெல்லியின் கன்ஜன்வாலா பகுதியில் அதிகாலை ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த இளம்பெண் மீது மோதிய மாருதி பலேனா கார் ஒன்று நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. ஆனால், இந்த காருக்கடியில் சிக்கிய இளம்பெண் உயிருக்கு போராடி பல கிலோமீட்டர்கள் தர தர வென இழுத்து செல்லப்பட்டு இருக்கிறார். இதில் ஆடைகள் கிழிந்து உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில், சாலையில் அந்த பெண் நிர்வாண கோலத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் போலிசிடம் தகவல் தெரிவிக்க விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போதுதான் கார் ஒன்று பெண்ணின் மீது மோதிவிட்டு இழுத்துக்கொண்டு சென்றது தெரியவந்து. சிசிடிவி காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்திய போலீசார் காரில் இருந்த 5 பேரையும் கைது செய்தனர். தங்களுக்கு பெண் காருக்கு அடியில் சிக்கியது தெரியாது போலீசார் கூறிய பிறகே தெரியும் என்று குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் கூறுவதாக டெல்லி போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. எனினும், இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடி கொடுக்கப்பட்டு உள்ளது.
இளம்பெண்ணின் குடும்பத்தினரும் தங்கள் மகள் மீது பாலியல் தாக்குதல்கள் நடைபெற்று இருக்கலாம் எனவும் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். புத்தாண்டு தினத்தில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசத்துடன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறுகையில், “அந்த இளம்பெண்ணிற்கு நடந்தது மிகவும் வெட்கக்கேடான சம்பவம். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கவேண்டும். அவர்களை தூக்கிலிட வேண்டும். இது மிகவும் அரிதிலும் அரிதான குற்றம். சமூகம் எதை நோக்கி செல்கிறது என எனக்கு தெரியவில்லை” என்று தெரிவித்தார்.
தனது டுவிட்டர் பதிவில் அரவிந்த் கெஜ்ரிவால் இது குறித்து பதிவிட்டு, “கன்ஜ்வாலா சம்பவம் தொடர்பாக துணை நிலை ஆளுநருடன் பேசினேன். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறேன். அரசியல் செல்வாக்கு கொண்டவர்களாக இருந்தாலும் மெத்தனம் காட்டாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி அளித்து இருக்கிறார்” என்றார்.
டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “சுல்தான்புரியில் நடந்த சம்பவத்தால் நான் வெட்கித் தலைகுனிகிறேன். இது மனிதாபிமானமற்ற கொடுங்குற்றம். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களின் அசுர குணம் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. டெல்லி காவல்துறையிடம் இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். அனைத்து கோணங்களிலும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும். இந்த சமூகம் பொறுப்பானதாக மாற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.