இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி நிறைவேற்றுவதில் என்ன தயக்கம்? என்று ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளதாவது:-
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், “ரூ.8 ஆயிரம் அடிப்படை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என அ.தி.மு.க. ஆட்சியில் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். அத்தகைய, 20 ஆயிரம் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று தி.மு.க. ஆட்சி, அவர்களுக்கு மற்ற ஆசிரியர்களுக்கு வழங்குவது போல் காலமுறை ஊதியம் வழங்கும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆட்சி பொறுப்பு ஏற்று 20 மாதங்கள் ஆகியும், இந்த வாக்குறுதியை நிறைவேற்ற தி.மு.க. அரசு முன்வராத நிலையில், இதனை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து முதல்-அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டாலும், ஒரு அறிக்கையாவது வெளியிட வேண்டும் என்பதே இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது. இதற்கு கூட செவிமடுக்க தி.மு.க. அரசு தயாராக இல்லை.
2018-ம் ஆண்டு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியபோது அதற்கு ஆதரவு தெரிவித்ததுடன், இதற்கு உடனடியாக தீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்தியவர் அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின். இப்போது அவரே முதல்-அமைச்சராக பொறுப்பேற்று 20 மாதங்கள் கடந்துள்ள நிலையில், அவர்களுடைய நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவதில் என்ன தயக்கம்? பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுவரும் நிலையில், 170-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம் அடைந்துள்ள நிலையில் கூட ஊதிய முரண்பாட்டை களைவதற்கான ஆணையையோ அல்லது குறிப்பிட்ட காலத்துக்குள் அதை களைவதற்கான அறிவிப்பையோ கூட முதல்-அமைச்சர் வெளியிடாமல் இருப்பது கண்டனத்துக்குரியது.
இடைநிலை ஆசிரியர்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதன் மூலம் அரசுக்கு ரூ.400 கோடி அளவுக்குத்தான் கூடுதல் செலவு ஏற்படும். இந்திய அரசியலமைப்பு சட்டத்திலேயே சம வேலைக்கு சம ஊதியம் என்ற கொள்கை உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் அடிப்படையில், முந்தைய தி.மு.க. அரசால் ஏற்படுத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டினை களையும் வகையில், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, ஊதிய முரண்பாட்டை களைய முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.