பணமதிப்பிழப்பை வைத்து அரசியல் செய்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய நேரமிது: அண்ணாமலை!

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை வைத்து அரசியல் செய்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

2016ம் ஆண்டு நவம்பர் 8ம் இரவு 500 மற்றும் 1,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு திடீர் அறிவிப்பை வெளியிட்டது. இந்தியாவில் உள்ள கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசின் நடவடிக்கை என்று பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார். மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் ஒரே இரவில் பல கோடி மதிப்பிலான இந்திய ரூபாய் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பணமதிப்பிழப்பு நடவடிக்கை நன்கு ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவு இல்லை என்றும், அதனை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக 58 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதி எஸ்.ஏ. நசீர் தலைமையிலான 5 நபர்கள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. ஐந்து நபர்கள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி. நாகரத்னா, ஏ.எஸ் போபன்னா மற்றும் வி.ராமசுப்ரமணியன் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பொறுத்தவரை தமிழ்நாட்டில் பலரும் தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறார்கள். இந்த நிலையில் உச்சநீதிமன்றம் ஆராய்ந்து தீர்க்கமான தீர்ப்பை வழங்கியுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் பலரும் முறையான பொருளாதார வட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். இதற்கு பணமதிப்பிழப்பு மிகப்பெரிய பங்காற்றியுள்ளது. பணபுழக்கம், டிஜிட்டல் கரன்சி அதிகரிப்பு, ஆன்லைன் வணிகம் என ஏராளமான நன்மைகள் ஏற்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை மீது எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபணமாகவில்லை. அதேபோல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் தமிழ்நாட்டில் அரசியல் செய்தார்கள். 2019, 2021 ஆகிய தேர்தல்களில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை வைத்து அரசியல் செய்யப்பட்டது. அப்படி அரசியல் செய்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய நேரமிது. பணமதிப்பிழப்பிற்கு மத்திய அரசு சொல்லிய காரணமும் சரி என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது என்று தெரிவித்தார்.

அதேபோல் நீதிபதி நாகரத்னா வழங்கிய மாறுபட்ட தீர்ப்பு குறித்த கேள்விக்கு, 1975-76 காலக்கட்டத்தில் அரசியல் சாசன அமர்பில் மாறுபட்ட தீர்ப்பு என்பது தொடர்ந்து வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்த வழக்கிலும் 4 பேர் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்றும், ஒருவர் மட்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லாது என்றும் தீர்ப்பு அளித்துள்ளனர். அந்த கருத்தை பெரிதுபடுத்த தேவையில்லை என்பது என் கருத்து என்று தெரிவித்தார்.