தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை: திருமாவளவன்

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தாத மாநிலமாக தமிழகம் உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான விசாரணைக்காக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இறையூர் பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து, பட்டியல் சாதி மக்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது ஊரில் உள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறை நிலவுவதாகவும், இப்பகுதி அய்யனார் கோவிலில் பல தலைமுறைகளாக பட்டியல் சாதியினருக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்று மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தியதில் இரட்டை குவளை முறை நிலவுவது உறுதியானது. தொடர்ந்து அங்குள்ள அய்யனார் கோயிலைத் திறந்து பட்டியலின மக்களை அங்கு வழிபட அழைத்துச் சென்றார். இந்த விவகாரம் தமிழ்நாட்டில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து டீக்கடை உரிமையாளர்கள் மற்றும் கோயிலுக்குள் நுழைய எதிர்ப்புத் தெரிவித்த இருவர் உட்பட நான்கு பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதில் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, அண்ணா சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியினர் தலைவர் திருமாவளவன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து திருமாவளவன் கூறியதாவது:-

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த செயலில் ஈடுபட்டோரை உடனே கைது செய்ய வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் தீண்டாமை அதிகம் உள்ளது. எனவே, இம்மாவட்டத்தை வன்கொடுமை பகுதியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அரசு ஒப்பந்தங்கள் எடுப்பது, கோயில் குளங்களில் மீன்பிடி ஏலம் எடுப்பது உள்ளிட்டவற்றில் பட்டியலின மக்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இது தொடர்பாக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்படும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தாத மாநிலமாக தமிழகம் உள்ளது. அதற்கு அதிகாரிகளே காரணம். வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான பிரச்சினைகளை விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதில் அலட்சியம் காட்டுகின்றனர்.

அரசியல் நிலைப்பாட்டை பொறுத்தவரை கூட்டணிக்குள் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. அதே வேளையில், பட்டியலின மக்களுக்கான உரிமைகளை மீட்டெடுக்க தொடர்ந்து போராடுவோம். இந்த விவகாரத்தில் ஒரு சில அமைப்புகளைத் தவிர பெரும்பாலான அரசியல் கட்சிகள் பட்டியலின மக்களுக்காக குரல் கொடுக்காதது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.