ஆளுநர் ஆர்.என்.ரவி, வரலாற்று திரிபு வாதங்களை தொடர்ந்து பேசி வருகிறார் என்று, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக பா.ஜ.க.வின் ஊதுகுழலாக செயல்படுகிற ஆளுநர் ஆர்.என்.ரவி, வரலாற்று திரிபு வாதங்களை தொடர்ந்து பேசி வருகிறார். தமிழகத்தில் இவரது பேச்சுகளை பார்க்கிறபோது, அரசியலமைப்பு சட்டம் உருவாக்கியது ஆளுநரா? அல்லது தமிழக பா.ஜ.க.வின் கொள்கை பரப்பு செயலாளரா? அல்லது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஊதுகுழலா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஆளுநர் மாளிகையில் அமர்ந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள அதிகாரங்களை மீறுகிற வகையில் தமிழக அமைச்சரவை எடுக்கிற முடிவுகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து அனைத்து ஜனநாயக மதச்சார்பற்ற கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராட வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.