டெல்லி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஆம் ஆத்மி – பாஜக கவுன்சிலர்கள் இடையே கைகலப்பு!

டெல்லி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஆம்ஆத்மி – பாஜக கவுன்சிலர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகள் கடந்த டிசம்பர் 4 ம் தேதி வெளியானது. மொத்தம் உள்ள 250 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களையும், பாஜக 104 இடங்களையும் காங்கிரசு கட்சி 9 இடங்களையும் கைப்பற்றியது. இந்நிலையில் 250 மாமன்ற உறுப்பினர்களை கொண்ட டெல்லி மாநகராட்சிக்கான மேயர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் மேயர் வேட்பாளருக்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஷெல்லி ஓபராய் மற்றும் அஷ்ஷூ தாக்கூர் ஆகியோரும், பாஜக சார்பில் ரேகா குப்தாவும் முன்மொழியப்பட்டுள்ளனர். புதிய மேயரைத் தேர்வு செய்தவதற்கான தேர்தல் வெள்ளிக்கிழமை நடக்க இருந்த நிலையில், மாநகராட்சி அவையின் தற்காலிக தலைவராக டெல்லி துணைநிலை ஆளுநர் விகே சக்சேனாவால் நியமிக்கப்பட்டிருந்த சத்ய சர்மா, மேயர் தேர்தலுக்கு முன்பாக நியமன உறுப்பினர்களான ஆல்டர்மென்களை பதவியேற்க அழைத்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் மாமன்றத்தின் முன்னால் வந்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், பாஜக- ஆம் ஆத்மி உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவையிலேயே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த கூச்சல் குழப்பத்தால், டெல்லி மாமன்றம் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. இதனால், வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டு மாமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.