நாங்கள் மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல என்றும், மதவாதத்துக்குத்தான் எதிரானவர்கள் என்றும் கோவில்களின் திருப்பணிக்கு நிதி வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இந்து அறநிலையத்துறை சார்பில் 1,250 கிராமப்புற கோவில்கள், 1,250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் உள்ள கோவில்களின் திருப்பணிக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.50 கோடி நிதி வழங்கும் விழா சென்னை வில்லிவாக்கம் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ள சிவசக்தி காலனி மைதானத்தில் நேற்று நடந்தது. சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன் வரவேற்றார். விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, மொத்தம் 2,500 கோவில்களின் திருப்பணிக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் நிதி வழங்கிடும் அடையாளமாக 18 கோவில்களின் நிர்வாகிகளிடம் தலா ரூ.2 லட்சம் நிதிக்கான காசோலையை நேரடியாக வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
2021-ம் ஆண்டில் நான் அதிகமாக கலந்து கொண்ட நிகழ்ச்சி எதுவென்றால் உள்துறை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி. அதற்கு அடுத்தது தொழில்துறை நடத்திய நிகழ்ச்சி. மூன்றாவதாக இந்து அறநிலையத்துறை நடத்திய நிகழ்ச்சியில் தான் அதிகமாக பங்கேற்றுள்ளேன். ஆனால், இன்றைக்கு திராவிடம் என்ற சொல்லை பிடிக்காதவர்கள், என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால், எங்களை மதத்தின் விரோதிகளாக சித்தரிக்கிற முயற்சிகளில் நிறைய ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் மதவாதத்துக்குத்தான் எதிரிகளே தவிர, மதத்திற்கு எதிரிகள் அல்ல. இதை அறிய வேண்டியவர்கள் அறிந்து கொண்டால் போதும்.
கோவில்கள் நமது கலைச் சின்னங்களாக, பண்பாட்டுச் சின்னங்களாக இருக்கின்றன. நமது சிற்பத்திறமைக்கான சாட்சியங்களாக இருக்கின்றன. நமது கலைத் திறமைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. எனவே, கண்ணும் கருத்துமாக அதை காப்பது அரசின் கடமை என்று எண்ணி செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். அத்தகைய கோவில்கள் சமத்துவம் உலவும் இடங்களாக அமைய வேண்டும் என்பதிலே நமது முழு கவனமும் இருந்து கொண்டிருக்கிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் எந்த மனிதரையும் சாதியின் பேரால் தள்ளி வைக்கக் கூடாது. அதற்குத்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தோம். ஆலயங்களில், நம்முடைய தமிழ் மொழி ஒலிக்க வேண்டும் என்ற உத்தரவையும் போட்டு இருக்கிறோம். சமூக சமத்துவம் கொண்டவைகளாக நமது ஆலயங்கள் திகழ வேண்டும். மனிதர்களில் மட்டுமல்ல கோவில்களிலும் நகர கோவில் – கிராமக் கோவில் என்றும் – பணக்காரக் கோவில் – ஏழை கோவில் என்றும் வேறுபடுத்தி சொல்லப்படுகிறது. எந்த கோவிலாக இருந்தாலும் – அனைத்தையும் ஒன்று போலக் கருதி, உதவி செய்யக்கூடிய அரசு தான் திராவிட மாடல் அரசு. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் பணியாற்றி வரும் அர்ச்சர்கள், குருக்கள், பட்டாச்சாரியர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினார். விழாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தருமபுரம் ஆதீனம், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார், மயிலை பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், அழகிய மணவாள சம்பத்குமார் ராமானுஜ ஜீயர் ஆகியோர் வாழ்த்தி பேசினர். செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், தயாநிதிமாறன் எம்.பி., மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில், இந்து அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் நன்றி கூறினார்.