தமிழ்நாடு தமிழை தாய்மொழியாக கொண்ட மக்களுக்கான மாநிலம் அல்ல: சுப்பிரமணியன் சாமி

தமிழ்நாடு என்பது தமிழை தாய்மொழியாக கொண்ட மக்களுக்கான மாநிலம் அல்ல என்பதை தெளிவுப்படுத்துவதற்காக தமிழக ஆளுநரை நாங்கள் ஆதரிக்கிறோம் என பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமி கூறியிக்கிறார்.

தமிழ்நாடு அரசுக்கும், தமிழக ஆளுநர் ஆர்என்ரவிக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. தமிழக அரசால் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கான மசோதா உள்ளிட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் இருதரப்புக்கும் இடையேயான கருத்து மோதல்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இது ஒருபுறம் இருக்க தொடர்ந்து ஆளுநர் ஆர்என் ரவி தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் சனாதன தர்மம், இந்து மதம் உள்ளிட்டவை பற்றி பேசி வருகிறார். மேலும் திராவிடத்துக்கு எதிராகவும் அவர் கருத்து தெரிவித்து வருகிறார். இதனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் தொடர்ந்து ஆளுநர் ஆர்என் ரவியை விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் அவரை திரும்ப பெற வேண்டும் எனவும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்பிக்கள் கையெழுத்திட்டு ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு கடிதம் வழங்கி உள்ளனர். இதில் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகளுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி பாஜக சார்பில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அழைத்து ஆர்என் ரவி பாராட்டினார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்தது. இதில் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்என் ரவி பேசினார். அப்போது ஆர்என் ரவி, ‛‛பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனையால் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மிக குறுகிய காலத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. விடுதலை போராட்டத்தின் தொடக்கத்தில் பல்வேறு பிரிவினைகள் நம்மிடையே இருந்தன. இப்போது நமது நாடு ஒரே பாரதம். நமது பாரத தேசத்தை பிளவுபடுத்த, அழிப்பதற்கு ஆங்கிலேயர்கள் முயற்சித்தனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் வித்தியாசமான அரசியல் சூழ்நிலை உள்ளது. தமிழகத்தில் தவறான, எதிர்மறையான அரசியல் அணுகுமுறைகள் இருக்கின்றன. இது ஒழிக்கப்பட வேண்டும். இந்தியா என்பது ஒரே நாடு. தமிழர்கள் தங்களை திராவிடர்களாக உணருகின்றனர். தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும். திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்” என பல்வேறு விஷயங்களை பேசினார்.

இந்நிலையில் தான் தமிழ்நாடு என்பதை தமிழகம் என சொல்வது சரியாக இருக்கும் என ஆளுநர் ஆர்என் ரவி பேசியதற்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்பட பிற கட்சியினர், தமிழ் அமைப்பினர், தமிழ் ஆர்வலர்கள் ஆளுநர் ஆர்என் ரவிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் டுவிட்டரில் தமிழ்நாடு என்பது டிரெண்டிங்கில் தொடர்ந்து இருந்து வருகிறது. அதேநேரத்தில் பாஜக மற்றும் பாஜக ஆதரவு அமைப்பினர் ஆளுநர் ஆர்என் ரவியின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் ஆளுநர் ஆர்என் ரவியின் பேச்சுக்கு பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமி கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி சுப்பிரமணியன் சாமி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛பகுப்பாய்வில் அனைத்து இந்தியர்களும் ஒரேமாதிரியான டிஎன்ஏவை கொண்டுள்ளனர். தமிழ்நாடு என்பது தமிழை தாய்மொழியாக கொண்ட மக்களுக்கான மாநிலம் அல்ல என்பதை தெளிவுப்படுத்துவதற்காக தமிழக ஆளுநரை நாங்கள் ஆதரிக்கிறோம். திராவிடம் என்பது சமஸ்கிருத சொல்லாகும். இது ஆதிசங்கரரால் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. ஆரியன் என்பது போலியாக ஆங்கிலேயர்களால் திணிக்கப்பட்ட வார்த்தையாகும்” என கூறியுள்ளார்.

தற்போது தமிழ்நாடா? தமிழகமா? என்ற விவாதம் நடந்து வரும் நிலையில் சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கருத்து எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் உள்ளது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.