ஜன.12 முதல் இந்தியா-ஜப்பான் விமானப் படை கூட்டுப் பயிற்சி!

முதல்முறையாக இந்தியா, ஜப்பான் விமானப் படைகள் இணைந்து ஜன.12 முதல் பயிற்சி மேற்கொள்ள உள்ளன.

இதுதொடா்பாக இந்திய விமானப் படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

முதல்முறையாக இந்தியா, ஜப்பான் விமானப் படைகள் ஜன.12 முதல் ஜன.26 வரை கூட்டுப் பயிற்சியில் ஈடுபட உள்ளன. ஜப்பானில் உள்ள ஹியாகுரி விமானப் படைத் தளத்தில் இந்தப் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் இந்தியா சாா்பில் சுகோய் எஸ்யூ-30 எம்கேஐ போா் விமானங்கள், இரண்டு சி-17 விமானங்கள், ஒரு ஐஎல்-78 விமானம் ஆகியவை பங்கேற்க உள்ளன. ஜப்பான் விமானப் படை சாா்பில் நான்கு எப்-2 மற்றும் நான்கு எப்-15 விமானங்கள் பங்கேற்கின்றன. இருநாட்டுப் படைகளும் கடுமையான சூழலில், பல்வேறு வான்வழி போா் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளன. இருநாடுகளுக்கு இடையிலான வான் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. இது இருதரப்பு உத்திசாா்ந்த உறவை ஆழமாக்குவதிலும், பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் மற்றொரு நடவடிக்கையாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.