சமூக நீதியே டிஜிட்டல் கண்டுபிடிப்புகளின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும்: திரௌபதி முர்மு

சமூக நீதியே டிஜிட்டல் கண்டுபிடிப்புகளின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்

டெல்லியில் நடைபெற்ற 7ஆவது டிஜிட்டல் இந்தியா விருதுகள் வழங்கும் நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு விருதுகளை வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், டிஜிட்டல் இந்தியா விருதுகள் 2022, அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி, ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும் டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் நம்பிக்கையை நிறைவடையச் செய்ய அங்கீகரித்து, ஊக்குவிக்கிறது என்றார்.

இந்த விருதுகள், டிஜிட்டல் ஆளுகையை திறம்பட பயன்படுத்துவதன் மூலம் மக்களின் திறனை வெளிக் கொண்டு வந்து, டிஜிட்டல் அதிகாரம் பெற்ற சமூகமாக இந்தியாவை மாற்றுவதற்கான ஒரு படியாகும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

விருது பெற்றவர்களை வாழ்த்திப் பேசிய அவர், பொது மக்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் தரவுப் பகிர்வு தளம் முதல் எளிதாக வணிகம் செய்வது வரை மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் பலதரப்பட்ட புதுமைகளைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். மேலும், டிஜிட்டல் கண்டுபிடிப்புகளின் பிரதான நோக்கமாக சமூக நீதி இருக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் முறையை பின்பற்றும் போது, இந்தியா அறிவுப் பொருளாதாரமாக வளரும். டிஜிட்டல் அந்த்யோதயாவை நோக்கிய நமது பயணத்தில், சமூகத்தில் பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினரை உள்ளடக்குவதை உறுதி செய்வதற்கும், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளை வலுப்படுத்துவதற்கும் இந்தியா சரியான முன்மாதிரியை அமைத்துள்ளது என்று திரௌபதி முர்மு நம்பிக்கை தெரிவித்தார்.

டிஜிட்டல் மாற்றம் பற்றிய இந்தியாவின் பார்வையானது புத்தாக்கம், செயல்படுத்துதல் மற்றும் வாய்ப்புகள் போன்றவைகளை உள்ளடக்கியது என்று குடியரசுத் தலைவர் கூறினார். உலகை மிகவும் அணுகக்கூடிய மற்றும் சமமான இடமாக மாற்ற புதுமையான தீர்வுகளைக் கண்டறிய கூட்டுத் தளங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். நம் நாட்டு திறமைகளின் மதிப்பை உலக அளவில் உணர்த்துவதில் இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சிறப்பான பணியைச் செய்துள்ளதாகவும் குடியரசுத் தலைவர் கூறினார்.

நாம் நடைமுறையில் உள்ள கொள்கைகளைப் பயன்படுத்தி, புதுமையான மேட்-இன்-இந்தியா தொழில்நுட்பங்களை உருவாக்குவதன் மூலம், மென்பொருள் மற்றும் வன்பொருள் தயாரிப்புகளுக்கான உலகளாவிய அதிகார மையமாக நம் நாட்டை நிலைநிறுத்தும் வகையில் செயல்பட முடியும். புத்தாக்க சிந்தனைகள், நுண்ணறிவு மற்றும் தீர்வுகளை உருவாக்குவதற்கு தரவுகள் அடிப்படையானதாகும் என்றும் அரசின் தரவுகளை இளம் தொழில்நுட்ப ஆர்வலர்கள் பயன்படுத்தும் வகையில், அதனை ஜனநாயகப்படுத்துவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் திரௌபதி முர்மு கூறினார்.