தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு எழுதிக்கொடுத்த உரையை சட்டப்பேரவையில் வாசிக்காமல் சில வார்த்தைகளை தவிர்த்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதை கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதுதான் மரபை மீறிய செயல் என்றும், ஆளுநர் உரையில் என்ன இடம்பெற்றது என்பது குறித்து தங்களுக்கு தெரியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் ஆளுநர் ரவி தமிழ்நாடு, திராவிட மாடல், பெரியார், அம்பேத்கர், அண்ணா, சமூகநீதி, சுயமரியாதை, உள்ளிட்ட பல வார்த்தைகளை வாசிக்காமல் தவிர்த்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. இதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு தயாரித்த உரையை ஆளுநர் ரவி படிக்காதது தவறு பேரவையிலேயே ஆளுநர் முன்பாகவே தெரிவித்ததுடன், ஆளுநர் உரை அவைக்குறிப்பில் இடம் பெறக்கூடாது என்று தீர்மானம் கொண்டு வந்து சட்டசபையில் நிறைவேற்றினார். அப்போது ஆளுநர் ரவி தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே அங்கிருந்து வெளியேறினார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
ஆண்டின் தொடக்கத்தில் அரசு செயல்படுத்தி உள்ள திட்டங்களையும், முடிவுகளையும் சட்டப்பேரவையில் சம்பிரதாயமாக அறிவிக்கும் ஒரு உரை. அப்படிதான் பார்க்கப்படுகிறது. ஆனால், சென்ற ஆண்டை போலவே ஆளுநர் உரையில் புதிய பெரிய திட்டங்கள் இடம்பெறவில்லை. இந்த அரசும் முதலமைச்சரும் தற்புகழ்ச்சியோடு தங்கள் முதுகை தாங்களே தட்டிக்கொள்கிறார்கள் என்ற பொதுமக்களின் குற்றச்சாட்டை மெய்பிக்கும் வகையில் இன்றைய தினம் சற்று வித்தியாசமாக தமிழக ஆளுநர் உரையின் மூலம் தங்கள் முதுகை தாங்களே தட்டி சபாஷ் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அதைத்தான் பார்க்க முடிகிறது. எனவே மக்களுக்கு இந்த ஆளுநர் உரையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இந்த ஆளுநர் உரை வெட்டுரையாக உள்ளது.” என்றார்.
அப்போது அவரிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு அச்சடித்து கொடுத்த உரைக்குறிப்பில் இடம்பெற்ற வார்த்தைகளை படிக்கவில்லை என குற்றச்சாட்டு வைப்பதை எப்படி பார்க்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். நாங்கள் ஆளுநர் உரையைதான் கேட்க வந்தோம். முதலமைச்சர் உரையை அல்ல. இதிலேயே தெளிவாக ஒரு புத்தகத்தை அச்சிட்டு ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் கொடுத்து இருக்கிறார்கள். அது முதலமைச்சருக்கும் பொருந்தும். ஆளுநரை அமர வைத்துக்கொண்டு ஒரு முதலமைச்சர் பேசுவது மரபுக்கு எதிரானது. அநாகரிகமானது” என்றார்.
சட்டம் ஒழுங்கு தொடர்பான குறிப்பை ஆளுநர் வாசிக்காதது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம், “தமிழ்நாட்டை பொறுத்தவரை அடியோடு சீரழிந்துவிட்டது. இது எல்லோருக்கும் தெரியும். ஊடகத்தில் தினந்தினம் காட்டிக்கொண்டே இருக்கிறீர்கள். நீங்கள் காட்டுவது உண்மையா? பொய்யா? சொல்லுங்கள். கொலை, கொள்ளை, திருட்டி, வழிப்பறி, போதைப்பொருள் தங்கு தடையின்றி கிடைக்கிறது. ராமநாதபுரத்திலிருந்து கடல் வழியாக போதைப்பொருள் கடத்துகிறார்கள்” என்றார்.