தமிழ்நாடு என்ற பெயரை யாரும் மாற்ற முடியாது. அது சரித்திரத்தில் இடம் பெற்றது: வைகோ

தமிழ்நாடு என்ற பெயர் வைக்க வேண்டும் என சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தார். தமிழ்நாடு என்ற பெயரை யாரும் மாற்ற முடியாது. அது சரித்திரத்தில் இடம் பெற்றது என்று, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று நெல்லையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழ்நாடு என்ற பெயர் வைக்க வேண்டும் என சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தார். நாடாளுமன்றத்தில் தொடர்ந்து மசோதா கொண்டு வந்தார்கள். அதை தி.மு.க. ஆதரித்தது. அதன் பிறகு அண்ணா முதல்-அமைச்சரான பிறகு அவர் தமிழ்நாடு என பெயர் வைக்க வேண்டும் என இலக்கிய உதாரணங்களை எடுத்து கூறினார். தமிழ்நாடு என்பது இலக்கியங்களில் இருக்கிறது. சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் தமிழ்நாடு என்று தான் இருக்கிறது. எனவே இந்த பெயரை எல்லோரும் ஏற்றுக் கொண்டு நான் தமிழ்நாடு என்று சொல்வேன், நீங்கள் வாழ்க என்று கூற வேண்டும் என அண்ணா சொன்னார். காங்கிரஸ் கட்சி தலைவர்களும் அனைத்து கட்சி தலைவர்களும் அண்ணா தமிழ்நாடு என்று சொல்ல வாழ்க என்று 3 முறை சொன்னார்கள். இப்படி ஒரு பெரிய வரலாறு இருக்கிறது. இந்த வரலாறு தெரியாமல் ஆளுநர் புதிய குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நோக்கத்தோடு மட்டுமல்ல அதற்குப் பின்னால் சங்பரிவார் சக்திகள் அவரை இயக்கிக் கொண்டிருக்கிறது. அவர்களின் கருவியாக ஆளுநர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் பெயரையும் மாற்றி கொண்டால் ரொம்ப நல்லது. தமிழ்நாடு என்ற பெயரை யாரும் மாற்ற முடியாது. அது சரித்திரத்தில் இடம் பெற்றது. தியாகத்தால் சூட்டப்பட்ட பெயராகும். இவ்வாறு அவர் கூறினார்.