தமிழ்நாட்டை விட்டு ஆளுநர் முழுமையாக வெளியேற வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி!

தமிழ்நாட்டை விட்டு ஆளுநர் முழுமையாக வெளியேற வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி., காட்டம் தெரிவித்துள்ளார்

நடப்பாண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று கூடியது. அப்போது உரையாற்றிய ஆளுநர், தமிழ்நாடு அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றிருந்த ’திராவிட மாடல்’ என்ற வார்த்தையை படிக்காமல் தவிர்த்தார். ‘அமைதி பூங்கா தமிழ்நாடு’ என்ற வாக்கியத்தையும் குறிப்பிடாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்தார். சமூகநீதி, சுயமரியாதை, திராவிட மாடல் என்ற வார்த்தைகள் இருந்ததால் 65ஆவது பத்தியை வாசிக்காமல் அப்படியே ஆளுநர் விட்டு விட்டார். இதையடுத்து, தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை; உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்துப்படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்று சட்டப்பேரவையில் ஆளுநர் முன்பே கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் தாமாக பேசிய வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்கும் தீர்மானத்தை அவர் முன்பே கொண்டு வந்தார். அப்போது, உடனடியாக அவையில் இருந்து ஆர்.என்.ரவி வெளியேறினார். தேசிய கீதம் இசைக்கும் முன்பாக அவையில் இருந்து ஆளுநர் வெளியேறியது இங்கு கவனிக்கத்தக்கது. அதன் தொடர்ச்சியாக, முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது.

ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டை விட்டு ஆளுநர் முழுமையாக வெளியேற வேண்டும் என மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் காட்டம் தெரிவித்துள்ளார். ‘பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா’ என்ற பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டி, “இனி தமிழ்நாட்டின் ஆளுநர் திருக்குறள் பற்றியோ, தமிழ் இலக்கியத்தை பற்றியோ, மாண்புகளை பற்றியோ அவமரியாதையாக திசை திருப்பி இந்துத்துவாவின் குரலில் பேசினால் ஆளுநர் மாளிகை முன்பு காரி உமிழும் போராட்டத்தை ஒவ்வொரு தமிழ் பற்றாளனும் செய்வான்.” என தாம் பேசிய வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ‘ஆளுநரே பாதியில் அல்ல, முழுமையாக வெளியேறுங்கள்’ என சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.