ஜனவரி 13ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை: திருமாவளவன் அறிவிப்பு!

ஜனவரி 13ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை செய்யப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

நடப்பாண்டில் தமிழ்நாட்டின் சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றிய போது, சமூக நீதி, திராவிட மாடல், தமிழ்நாடு, அம்பேத்கர், அண்ணா, பெரியார், கருணாநிதி உள்ளிட்ட வார்த்தைகளை உச்சரிக்க மறுத்து கடந்து சென்றார். இதற்கு சட்டசபையிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததோடு, தீர்மானமும் கொண்டு வந்தார். இதனால் சட்டசபையில் தேசிய கீதம் பாடுவதற்கு முன்பாகவே ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தார். இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜனவரி 13ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவிநீக்கம் செய்யக்கோரி, ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் செய்யப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுகுறித்து திருமாவளவன் கூறுகையில், தேசிய கீதம் இசைப்பதற்கு முன் ஆளுநர் வெளியேறியது அவை மீறல் மட்டுமின்றி தேசிய கீத அவமதிப்பாகும். இந்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே முரண்பாடுகளை உருவாக்கி அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதே ஆளுநர் நோக்கம். ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஆர்எஸ்எஸ் முகம் மீண்டும் அம்பலமாகியுள்ளது.

அண்மை காலமாக திமுக அரசுக்கு எதிராகவும், திராவிட மாடல் கொள்கைக்கு எதிராகவும் கருத்துகளை ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து வந்துள்ளார். தமிழ்நாட்டில் பின்பற்றி வரும் சமூகநீதி அரசியலையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதேபோல் தமிழகம், தமிழ்நாடு இரண்டும் வேறுவேறு என்ற தோற்றத்தை உருவாக்கி, அதன் மீது போலியான விவாதத்தையும் ஏற்படுத்தினார். இவையனைத்தும் அவரின் திட்டமிட்ட செயல்பாடுகள். இந்த நிலையில் தமிழக அரசு ஆளுநர் உரையை தயாரித்து கொடுத்து, ஆளுநரின் ஒப்புதலோடு அச்சிடப்பட்டு வாசிப்பதற்காக சட்டசபையில் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் சட்டசபையில் ஆளுநர் உரையாற்றிய போது, சில பகுதிகளை நீக்கியும், சில பகுதிகளை சேர்த்தும் வாசித்திருக்கிறார். இது அவை மரபு மீறல் மட்டுமல்ல, தமிழ்நாடு அரசுக்கு எதிரான செயல்பாடு. இது ஆர்எஸ்எஸ் செயல்திட்டமாகும். ஆகவே அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஜனவரி 13ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தை விசிக நடத்த உள்ளது என்று தெரிவித்துள்ளார்.