மின்சார வாரிய ஊழியர்கள் நாளை அழைப்பு விடுத்துள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த சரவணன், ஏழுமலை ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்களில், ஊழியர் சங்கங்கள் கோரிக்கை தொடர்பாக டான்ஜெட்கோ நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த வேலை நிறுத்தப் போராட்டம் சட்டவிரோதமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதிப்பு, டான்ஜெட்கோவின் நிதிநிலை, எதிர்வரும் பொங்கல் பண்டிகையை கருத்தில் கொள்ளாமல் இந்த போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளதாகவும், இந்த போராட்டத்துக்கு தடை விதிக்காவிட்டால் சமுதாயம் ஸ்தம்பித்து விடும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கே.எம். விஜயன் மற்றும் மனோகரன் ஆகியோர், தொழில் தகராறு சட்டத்தின்படி, சமரச பேச்சுவார்த்தை துவங்கிய பிறகு, வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்க முடியாது என்பதால் இந்தப் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், சட்டத்தின் படி வேலை நிறுத்த போராட்டத்திற்கு 6 வாரங்கள் முன்கூட்டியே அறிவிக்கையானது வெளியிடப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டி வாதிட்டனர்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், மின்வாரிய ஊழியர்கள் சங்கங்களின் கோரிக்கை தொடர்பாக இன்று காலை பேச்சுவார்த்தை துவங்கி உள்ளது என்றும், இது குறித்த அறிவிப்பை கடந்த ஐந்தாம் தேதியே அனுப்பிய போதும் வேலை நிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தது சட்டவிரோதமானது என்றும் தெரிவித்தார். மேலும், மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், ஆவின் பால் வினியோகம், மருத்துவமனை செயல்பாடுகள், பள்ளி கல்லூரிகளின் செயல்பாடுகள் பாதிக்கும் என்பதால் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
இந்த வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மின்வாரிய ஊழியர்கள் தொழிற்சங்கம் நாளை அழைப்பு விடுத்துள்ள வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்கக் கூடும் எனவும், பேச்சுவார்த்தை நடைபெறும் நேரத்தில் அதன் முடிவுகளை தெரிந்து கொள்ளும் முன் வேலை நிறுத்தம் செய்வது சட்டவிரோதமானது எனக் கூறி, வேலை நிறுத்ததுக்கு தடைவிதித்து உத்தரவிட்டனர். மேலும் இந்த உத்தரவை அனைத்து தரப்பினருக்கும் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று அரசு தரப்புக்கும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.