சட்டப்பேரவையை மதிக்காத இப்படிப்பட்ட ஆளுநரை தமிழ்நாடு பார்த்ததில்லை: ராமதாஸ்

சட்டப்பேரவை நாகரிகத்தை மதிக்காத இப்படிப்பட்ட ஆளுநரை தமிழ்நாடு பார்த்ததில்லை, என ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், “சட்டப்பேரவை மரபுகளையும், அவை நாகரிகத்தையும் மதிக்காத இப்படிப்பட்ட ஆளுநரை தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை!’’ என பதிவிட்டுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆர்.என். ரவியை விமர்சித்து டுவீட் போட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்ட உரையை, சட்டப்பேரவையில் படிக்கும் போது சில வார்த்தைகளையும், சில பத்திகளையும், ஆளுநர் தவிர்த்திருக்கிறார். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், சட்டப்பேரவையையும் அவமதிக்கும் செயலாகும். தமிழ்நாடு அரசால் குறிப்பிடப்படும் சில சொற்களில் பாமகவுக்கு உடன்பாடு இல்லை; ஆளுநருக்கும் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசால் தயாரித்து வழங்கப்படும் உரையை மாற்றாமல் படிப்பது தான் நாகரிகமும், மரபும் ஆகும்.

அச்சிடப்பட்ட ஆளுநர் உரையை மட்டுமே அவைக்குறிப்பில் ஏற்ற வேண்டும் என்று கோரி முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்த போது, அவை நடவடிக்கைகள் முடிவடைந்து தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே ஆளுநர் வெளியேறியது ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்காது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அரசும் ஆளுநரும் நிர்வாகம் என்ற நாணயத்தின் இரு பக்கங்கள். அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்வது நல்லதல்ல. தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆளுநரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மாண்புமிகு முதல்வர் அவர்கள், சட்டப்பேரவையில் உரையாற்றிக் கொண்டு இருக்கும் போதே அவை மரபுகளை மீறி, பாதியிலேயே ஆளுநர் வெளியேறி, பேரவையையும், அமைச்சர்களையும், உறுப்பினர்களையும், ஆளுநர் அவமதித்திருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.

சமூக நீ்தி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல், பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், திராவிட மாடல் ஆட்சி, தமிழ்நாடு அமைதிப் பூங்கா உள்ளிட்ட வார்த்தைகளை வாசிக்க, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு விருப்பம் இல்லை என்றால், சட்டப்பேரவையை விட்டு மட்டுமின்றி, தமிழ்நாட்டை விட்டே வெளியேறலாம்.

தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்து ஆட்சியில் அமர வைத்த ஓர் அரசை, இம்மணுக்கான அரசியல் தெரியாத ஆளுநர் ஆர்.என்.ரவி இழிவுப்படுத்தியிருப்பது, ஒட்டுமொத்த தமிழர்களையும் கொச்சைப்படுத்தியதை போன்று தான். தமிழ்நாட்டுக்கு வந்ததில் இருந்தே, ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ்-யின் உறுப்பினராக தான் இதுவரை செயல்பட்டு வருகிறாரே ஒழிய, ஆளுநராக ஒருபோதும் செயலாற்றவில்லை. ஆளுநர் பதவி என்பதே தேவையில்லாத ஒன்று தான். முதல் கட்டமாக ஆளுநர் ரவியை உடனடியாக தமிழ்நாட்டிலிருந்து மாற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனவே, மாண்புமிகு முதல்வர் அவர்கள் சட்டப்பேரவையில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே அவை மரபுகளை மீறி, பாதியிலேயே வெளியேறிய ஆளுநர், தமிழ்நாட்டை விட்டே வெளியேறலாம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. எனது நிலத்திற்கான, எனது மக்களுக்கான அரசியல் செய்ய தெரியாத ஆளுநரை, குடியரசுத் தலைவர் திரும்ப பெற வேண்டும் என்பதே சிறந்த முடிவாக இருக்கும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கருதுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.