அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பெயரை கூட ஆளுநர் உச்சரிக்கவில்லை: அப்பாவு

அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பெயரை கூட ஆளுநர் உச்சரிக்கவில்லை என்றும், அவர்களின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை என்றும் சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார்.

நடப்பாண்டில் தமிழ்நாடு சட்டசபையின் முதல் கூட்டம் இன்று அதிக எதிர்பார்ப்புடன் தொடங்கியது. வழக்கமாக சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்கும். இன்று 2023ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் என்பதால் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றிய போது, சமூகநீதி, சுயமரியாதை, திராவிட மாடல், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளை வாசிக்காமல் முழுமையாக கடந்து சென்றார். இதற்கு சட்டசபையிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினார். பின்னர் தேசிய கீதம் பாடி முடிப்பதற்கு முன்னதாக ஆளுநர் சட்டசபையில் இருந்து வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து சபாநாயகர் அப்பாவு கூறுகையில், ஜனவரி 13ம் தேதி வரை சட்டசபைக் கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளைய சட்டசபை கூட்டத்தில் மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சட்டசபை நாள் முழுவதும் தள்ளிவைக்கப்பட உள்ளது. கூட்டத்தின் கடைசி நாளில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு, ஆளுநர் உரையில் ஏற்கனவே அச்சிடப்பட்டவை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும். தேசிய கீதம் இசைத்து முடித்த பின்னர் அவையில் இருந்து ஆளுநர் புறப்படுவதே மரபு. அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பெயரை கூட ஆளுநர் உச்சரிக்கவில்லை. ஆளுநர் உரை ஜனவரி 5ம் தேதி தமிழக அரசு சார்பில் அனுப்பட்டு, ஜனவரி 7ம் தேதி ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால் உரையில் திருத்தம் செய்ததை முறைப்படி சொல்லாமல், அதனை பொது மேடையில் பேசுவது நாகரீகமல்ல. உயர் பதவி கிடைக்கும் என்ற நோக்கத்தில் ஆளுநர்கள் மத்திய அரசுக்கு ஆதரவாக நடந்துகொள்வதாக எனக்கு சந்தேகமாக உள்ளது.

ஆளுநரின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை. பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் வேறுபட்டு செயல்படுகிறார்கள். அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டிய ஆளுநரே, அதனை மீறும் வகையில் நடந்துகொண்டுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் வேதனையளிக்கும் வகையில் உள்ளது. மத்திய அரசு தயாரித்த உரையையே நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் வாசிக்கிறார். ஆளுநர் சில வார்த்தைகளை தவிர்த்ததாலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச வேண்டியதாகிவிட்டது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு 100 சதவிகிதம் அமைதி காத்துள்ளது. ஆளுநர் விவகாரத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்பின் ஆளுநரிடம் விளக்கம் கேட்க எதுவுமில்லை என்று தெரிவித்தார்.